கியாஸ் நிரப்பும் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

கருப்பூர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டம் 7-வது நாளாக தொடர்வதால் பணிகள் பாதிக்கப்பட்டது.

Update: 2024-02-15 08:02 GMT

போராட்டம் 

சேலம் கருப்பூர் பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் கியாஸ் சிலிண்டரில் நிரப்பப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இங்கு நிரப்பப்படும் கியாஸ் சிலிண்டர்கள் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் உள்பட பல மாவட்டங்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கியாஸ் நிரப்பும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதில் 65 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

ஒப்பந்த தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.625 வீதம் மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம் பெற்று வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் புதிதாக சங்கம் தொடங்கியதாக கூறப்படுகிறது. சங்க நிர்வாகிகள் 10 பேரை தற்காலிக பணி நீக்கம் செய்வதாக நிர்வாகம் தரப்பில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தனர். இதை கண்டித்தும் சம்பளம் உயர்த்தி வழங்கக்கோரியும், தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரியும் தொழிற்சாலை முன்பு கடந்த 8-ந் தேதி காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

இவர்களின் போராட்டம் 7-வது நாளாக நேற்றும் நீடித்தது. நிறுவனம் தரப்பில் புதிய ஆட்களை வைத்து கியாஸ் நிரப்பும் பணியில் ஈடுபடுவதால் பணிகள் தாமதமாக நடைபெறுகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் இருந்து கியாஸ் லோடு கொண்டு வரப்பட்ட லாரிகள், சேலம்-ஓமலூர் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் வழக்கமாக 60 லாரிகளில் கியாஸ் லோடு கொண்டு வரப்பட்டு கியாஸ் நிரப்பி வந்த நிலையில் தற்போது பாதி அளவில் தான் சிலிண்டர்கள் லோடு ஏற்றப்பட்டு வினியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் இந்த தொழிற்சாலையில் கியாஸ் நிரப்பும் பணி தொடர்ந்து பாதிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News