உலக மக்கள் கட்சியின் கொடி அறிமுக விழா
களியக்காவிளையில் உலக மக்கள் கட்சியின் கொடி அறிமுக விழா நடந்தது; பார்லி., தேர்தலில் திமுக., கூட்டணிக்கு ஆதரவு அளிக்கப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே மண்ணாரப்பு பகுதியைச் சேர்ந்தவர் வசந்தீஸ்வரன். ஆட்டோ ஓட்டுநரான இவர் உலக மக்கள் கட்சியை துவங்கி, தலைமை தேர்தல் ஆணையத்தில் கடந்த 2016 ம் ஆண்டு பதிவு செய்திருந்தார். அதன்பின்னர் கட்சிக் கொடி, சின்னம் அறிமுகப்படுத்தாத நிலையில் கடந்த 2016, 2021 ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் விளவங்கோடு தொகுதியிலும், 2019 ல் நடந்த மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி மக்களவை தொகுதியிலும், 2022 ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் களியக்காவிளை பேரூராட்சி வார்டு உறுப்பினருக்கும் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்நிலையில் 2024 ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று கட்சி அலுவலகத்தில் வைத்து தனது கட்சி கொடி அறிமுகம் செய்யும் விழா நடைபெற்றது.
கட்சியின் நிறுவனர் தலைவர் வசந்தீஸ்வரன் கொடியை அறிமுகம் செய்து பேசினார். சுற்றுச்சூழல் மற்றும் கனிமவளம் உள்ளிட்ட இயற்கை வளங்களை பாதுகாத்திட வேண்டும் என்ற நோக்கத்தில் இக் கட்சி துவங்கப்பட்டது எனவும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக உழைக்க இருப்பதாவும் கூறினார். நீல வண்ண கொடியில் உலக உருண்டை மற்றும் நட்சத்திரத்தின் நடுவில் குழந்தைகள் உருவ படம் இடம்பெற்றுள்ளது. விழாவில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.