தஞ்சாவூரில் உலக காட்டுயிர் தின விழிப்புணர்வு
தஞ்சாவூரில் உலகக் காட்டுயிர் தினத்தை முன்னிட்டு நடந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் டிஜிட்டல் தொழில் நுட்பத்தைக் கொண்டு காட்டுயிர்களை பாதுகாக்க மாணவிகள் உறுதியேற்றனர்.
உலகக் காட்டுயிர் தினத்தையொட்டி, தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் சிறப்புக் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. சுற்றுச் சூழல் கல்வி கழகம், மற்றும் அறிவியல் கழகம் இணைந்து நடத்திய இந்த விழாவில் 200க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் முனைவர் அ.ஜான் பீட்டர் தலைமை வகித்தார். பான் செக்கர்ஸ் கல்லூரி துணை முதல்வர் முனைவர் கலைவாணி உயிரினப் பாதுகாப்பில் டிஜிட்டல் தொழில் நுட்பத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.
தஞ்சாவூர் மாநகராட்சி அண்ணா நகர் மருத்துவ அலுவலர் டாக்டர் வெங்கடேஷ், நலவாழ்விற்கு நேரிடும் சுற்றுச் சூழல் சவால்கள் குறித்தும், பெண்களுக்கான நலவாழ்வு வழிகாட்டுதல்களையும் வழங்கினார். பாம்பினோ மழலையர் பள்ளி தாளாளர் கல்பனா சண்முகசுந்தரம் மாணவர்கள் கற்கும்போதும், கற்றலுக்குப் பின்னும் செய்ய வேண்டியவைகளை பட்டியலிட்டு விளக்கினார், மாணவிகள் மிகுந்த பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்று தன் அனுபவங்களை விளக்கினார்.
விலங்கியல் துறை பேராசிரியரும், அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் வெ.சுகுமாரன் உலக காட்டுயிர் தினத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். முன்னதாக, ஆங்கிலத் துறை பேராசிரியரும், சுற்றுச் சூழல்கல்விக் கழக ஒருங்கிணைப்பாளருமான முனைவர் ச.ச.நிர்மலா வரவேற்றார். மாணவி கனிமொழி நன்றி கூறினார். ஆங்கிலத்துறை மாணவி அமிர்தவர்ஷினி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.