வீரராகவ பெருமாள் திருக்கோவிலில் ஸ்ரீ ஹயக்ரீவர் வழிபாடு
திருப்பூர் அருள்மிகு வீரராகவப் பெருமாள் திருக்கோயிலில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக ஸ்ரீ ஹயக்ரீவர் வழிபாடு நடைபெற்றது.
By : King 24x7 Angel
Update: 2024-02-12 09:41 GMT
திருப்பூர் அருள்மிகு வீரராகவப் பெருமாள் திருக்கோவிலில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக ஸ்ரீ ஹயக்ரீவர் வழிபாடு நடைபெற்றது. திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில் கடந்த 8 ஆண்டுகளாக பொதுத்தேர்வு எழுதும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் கல்வியில் சிறக்கவும், அவர்களுக்கு தேர்வு பயம், பதட்டம் நீங்கவும், நினைவாற்றல் அதிகரிக்கவும் வேண்டி, திருப்பூர் மாநகர், அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத அருள்மிகு வீரராகவப் பெருமாள் திருக்கோவிலில் உள்ள ஸ்ரீ ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி இந்தாண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களுக்கான சிறப்பு வழிபாடு, 9வது ஆண்டாக இன்று நடைபெற்றது. இன்று பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள், மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு வழிபட்டனர். காலை 9 மணிக்கு சிறப்பு வேள்வியும், மூலவருக்கு திருமஞ்சன நிகழ்வும், நாம சங்கீர்த்தனமும், தொடர்ந்து சாத்துமறை பூஜையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. மகா தீபாரதனை நிறைவடைந்தபின் அனைவருக்கும் வேள்வி சாந்தும், பிரசாதமும் வழங்கப்பட்டது. பெற்றோர்கள், மாணாக்கள் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானமும் அளிக்கப்பட்டது. மாணவ, மாணவிகள் வரிசையாக நின்று சுவாமி தரிசனம் செய்தனர். அவர்கள் தேர்வுக்கு பயன்படுத்தும் எழுதுபொருட்களை சுவாமியின் பாதத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட பின்னர் பெற்றுக்கொண்டனர். அனைவருக்கும் #திருக்கோவில்_திருத்தொண்டர்_அறக்கட்டளை சார்பில் ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ ஹயக்ரீவர் மந்திரங்கள் பொறிக்கப்பட்ட அட்டைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.