ஏற்காடு பஸ் விபத்து : ஓட்டுனரின் லைசென்ஸ் 5 ஆண்டுகள் ரத்து

ஏற்காட்டில் பஸ் கவிழ்ந்து 6 பேர் பலியான சம்பவத்தில் டிரைவரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொணடனர்.

Update: 2024-06-17 07:02 GMT

பஸ் டிரைவர் ஜனார்த்தனன்

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து சேலத்திற்கு கடந்த ஏப்ரல் மாதம் 30-ந்தேதி பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு தனியார் பஸ் சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. ஏற்காடு மலைப்பாதை 13-வது கொண்டை ஊசி வளைவில் வந்த போது பஸ் திடீரென்று தலைகுப்புற கவிழ்ந்து 11-வது கொண்டை ஊசியில் சாலையோரம் விழுந்தது. இதில் பஸ்சில் இருந்த ஒரு சிறுவன் உள்பட 6 பேர் பரிதாபமாக இறந்தனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

இதையடுத்து போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விபத்து குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள், பஸ் டிரைவர் ஜனார்த்தனனிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன்படி தற்போது 5 ஆண்டுகளுக்கு ஜனார்த்தனனின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்து அவர்கள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

இது குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:- பொதுவாக விபத்தை ஏற்படுத்தும், டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்ய மட்டும் அதிகாரம் உண்டு. ஆயுள் முழுவதும் ரத்து செய்ய வேண்டும் என்றால் அது குறித்து கோர்ட்டு தான் முடிவு செய்யும். எனவே தற்போது முதல் கட்டமாக பஸ் கவிழ்ந்து 6 பேர் பலியான விபத்தில் பஸ் டிரைவர் ஜனார்த்தனன் ஓட்டுனர் உரிமம் 5 ஆண்டுகளுக்கு ரத்து செய்து நடவடிக்கை எடுத்து உள்ளோம்.

Tags:    

Similar News