சேலம் அருகே நில தகராறில் ஈடுபட்ட வாலிபர் கைது
சேலம் அருகே நில தகராறில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள நீர் முள்ளிக்குட்டை பேளூர் ரோட்டை சேர்ந்தவர் பழனிசாமி (53). இவரது அண்ணன் மாதேஸ்வரன். இவர்களுக்கு நீர்முள்ளிக்குட்டை சுடுகாடு அருகே 5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் தனது பாகத்தில் இருந்து 2 ஏக்கர் நிலத்தை பழனிசாமி, வேறொரு நபருக்கு விற்பனை செய்துள்ளார். அந்த நிலத்தை வாங்கியவர், மொத்த முள்ள 5 ஏக்கர் நிலத்தையும் வைத்துக் கொண்டு, பழனிசாமி, மாதேஸ்வரன் தரப்பினருக்கு கொடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் பழனிசாமியின் வீட்டிற்கு மாதேஸ்வரன், மகன் ஹரிகரசுதன், அவரது அக்கா பிரியதர்ஷினி ஆகியோர் சென்று தங்களுக்கு சேர வேண்டிய நிலத்தை பிரித்து தரும்படி கேட்டுள்ளனர்.
அப்போது பழனிசாமிக்கும், ஹரிகரசுதனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில்,சித்தப்பா பழனிசாமிக்கு ஹரிகரசுதன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றி காரிப்பட்டி போலீசில் பழனிசாமி புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தி, தகராறில் ஈடுபட்ட ஹரிகரசுதன், பிரியதர்ஷினி மீது கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து ஹரிகரசுதனை (23) கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.