நிலத்தகராறில் இளைஞர் வெட்டி படுகொலை
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே நிலத் தகராறில் படுகாயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியைச் சேர்ந்த அழகப்பன் மகன் இளங்கோவன் (44) தற்போது இலுப்பூரில் வசித்து வருகிறார். இவருக்கும், இலுப்பூரை அடுத்த கரந்தபட்டியைச் சேர்ந்த சேட்டு மகன் பாஸ்கர் (23) என்பவருக்கும் நிலம் தொடர்பான முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை (மே 23 புதுக்கோட்டை மாவட்டம்,இலுப்பூரை அடுத்த குரும்பட்டியில் உள்ள கிருஷ்ணமூர்த்தி என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் இளங்கோவன் கட்டிலில் படுத்திருந்தார்.
அப்போது அங்கு வந்த பாஸ்கர், இளங்கோவிடம் தகராறில் ஈடுபட்டு தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் இளக்கோவனை வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த இளங்கோவன் சனிக்கிழமை உயிரிழந்தார்.இதுதொடர்பாக இலுப்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து பாஸ்கரைக் கைது செய்து புதுக்கோட்டை கிளைச் சிறையில் அடைத்தனர்.