ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்தல் குறித்து, விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
நாமக்கல் வட்டார,வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் மானாவாரி பகுதி மேம்பாடு மற்றும் ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி, அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் வரும், எர்ணாபுரம் கிராமத்தில் நடைபெற்றது.
வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா தலைமை வகித்து, அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்தும், மானாவாரி பகுதி மேம்பாட்டு, ஓருங்கிணைந்த பண்ணையம் குறித்தும் விளக்கி கூறினார்.
நாமக்கல் வேளாண்மை அலுவலர் மோகன், முன்னிலை வகித்து துறை சார்ந்த மானிய திட்டங்கள், விவசாயிகளுக்கு உயிர் உரங்கள், உயிரியல் பூஞ்சான கொல்லிகள் மூலம் விதை நேர்த்தி செய்தல், பயிர்களுக்கு நுண்ணூட்ட கலவைகள் இடுவதன் முக்கியத்துவம் குறித்து பேசினார். நாமக்கல் வேளாண்மை அறிவியல் மைய உதவி பேராசிரியர் பிருந்தா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விவசாயத்துடன் ஒன்றையொன்று சார்ந்த கூடுதல் வருவாய் தரக்கூடிய வெள்ளாடு வளர்ப்பு, செம்மறியாடு வளர்ப்பு, கறவை மாடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு மரக்கன்றுகள் வளர்ப்பு, காளான் வளர்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பு போன்ற தொழில்நுட்பங்களை மேற்கொண்டு ஒருங்கிணைந்த பண்ணையம் செய்தால், விவசாயிகள் தடையின்றி வருமானம் ஈட்டலாம் என்பது குறித்து விளக்கி, விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.
மேலும், வேளாண் பயிர்கள் சாகுபடியில் மஞ்சள் மற்றும் நீல வண்ண ஒட்டும் அட்டைகளை பயன்படுத்தி பூச்சிகளைக் கவர்ந்தழித்தல் போன்ற அங்கக பூச்சிக்கட்டுப்பாடு முறைகளை விளக்கி, விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விரிவாகப் பதிலளித்தார்.
பயிற்சியில் அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ், உதவி தொழில் நுட்ப மேலாளர் கவிசங்கர் உள்ளிட்டோர் பேசினார்கள். திரளான விவசாயிகள் பயிற்சியில் கலந்துகொண்டனர்.