பருவ மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்
ஆர்கே.பேட்டை, செப்.11-
பருவ மழை துவங்க உள்ளதால் குடிநீர் தொட்டிகளை பிளிச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்து குளோரின் கலந்த குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என சுகாதார ஊழியர்கள் பயிற்சி கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி அறிவுறுத்தினார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றிய அலுவலகத்தில், சுகாதார ஆய்வாளர்கள், துாய்மை பணியாளர்கள் ஆகியோருக்கான பயிற்சி கூட்டம் நேற்று நடந்தது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி கலந்துக் கொண்டு பேசியதாவது: பருவ மழை துவங்கவுள்ளதால், முன்னெச்சரிக்கையாக துாய்மை பணியாளர்கள் செயல்பட வேண்டும். அதே போல், சுகாதார ஊழியர்கள் மற்றும் பம்ப் ஆப்ரேட்டர்கள் ஊராட்சிகளில் பயன்பாட்டில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டி மற்றும் சின்டெக்ஸ் தொட்டிகளை குறைந்த பட்சம் மாதத்திற்கு இரு முறையாவது சுத்தம் செய்து, பிளிச்சிங் பவுடர் துாவியுடன் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்ற வேண்டும்.
மேலும் குடிநீர் தொட்டியில் குளோரின் பவுடர் கலந்து தெருக்குழாய்களில் வினியோகம் செய்ய வேண்டும். மழைநீர் தேங்காத வண்ணம் கண்காணிக்க வேண்டும். அதே போல் ஊராட்சிகளில் கழிவுநீர் கால்வாய்களை சுத்தப்படுத்தியும், கழிவுநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அந்தந்த ஊராட்சி நிர்வாகத்தின் கடமையாகும். எனவே பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் அனைவரும் தயார் நிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்