கர்நாடகாவிற்கு மின்சாரத்தை நிறுத்தக்கோரி அக். 9ம் தேதி நெய்வேலியில் விவசாயிகள் போராட்டம்

Update: 2023-09-27 11:26 GMT

விவசாயிகள் போராட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கர்நாடகா அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விடாததைக் கண்டித்து, அம்மா நிலத்திற்கு செல்லும் மின்சாரத்தை நிறுத்தக்கோரி வருகிற அக்.9 ஆம் தேதி, நெய்வேலி அனல் மின் நிலையம் முன்பு, விவசாய முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து, தமிழ்நாடு விவசாய முன்னேற்றக்கழகத்தின் சர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

காவிரியில் நீர் வரத்து குறைந்துள்ளதால், டெல்டா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சுப்ரீம் கோர்ட் மற்றும் காவிரி ஒழங்காற்றுக்குழு உத்தரவுகளையும் கர்நாடகா அரசு மதிக்கவில்லை. கர்நாடகா அரசு காவேரியில் தண்ணீர் திறந்து விடாததைக் கண்டித்து, தமிழகத்தில் உள்ள நெய்வேலியில் இருந்து கர்நாடகத்திற்கு மின்சாரம் வழங்குவதை நிறுத்தக் கோரி, விவசாய முன்னேற்றக் கழகத்தின் சார்பில், வருகிற அக். 9ம் தேதி திங்கள்கிழமை காலை 10 மணிக்கு நெய்வேலி அணல் மின் நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

கடலூர் மாவட்ட செயலாளர் மற்றும் மண்டல பொறுப்பாளர் பாலு போராட்டத்திற்கு தலைமை வகிக்கிறார். மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக நெய்வேலி அனல்மின் நிலையம் முன்பு நடைபெறும் இப்போராட்டத்தில், விவசாய முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் செல்ல ராசாமணி கலந்துகொண்டு போராட்டத்தை துவக்கி வைத்துப் பேசுகிறார்.

விவசாய முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன், காவேரி நடுவர் மன்ற தீர்ப்பை மதிக்காமல் நடக்கும் கர்நாடகா அரசை கண்டித்து பேசுகிறார். போராட்டத்தில் விவசாய முன்னேற்றக்கழக தலைமைக் கழக நிர்வாகிகள், அரசியல் உயர்மட்ட குழு பொறுப்பாளர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், சார்புமன்ற நிர்வாகிகள், ஒன்றிய, கிளை செயலாளர்கள், மகளிரணியினர் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்வர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News