33 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலில் பூஜைகள் செய்த தாழ்ந்தப்பட்ட சமூகத்தினர்
நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி சந்தை அருகே பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் வழிபாடு செய்வது தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரச்சினை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் அந்தக் கோவிலுக்கு வழிபாடு செய்ய வராமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் அவர்கள் கோவிலில் நுழையும் போராட்டம் அறிவித்திருந்தனர். இதை அறிந்த கோவில் நிர்வாகிகள் சிலர் பேளுக்குறிச்சி போலீசில் கோவிலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டி புகார் கொடுத்தனர். அதைதொடர்ந்து நாமக்கல் மாவட்ட எஸ்.பி தலைமையில் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சமீபத்தில் அந்த இரு சமூகத்தினரிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அந்த கோவிலில் ஏற்கனவே என்ன நடைமுறையோ அதுவே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பினை கருதி பேளுக்குறிச்சி பெரிய மாரியம்மன் மற்றும் விநாயகர் கோவிலுக்குள் பொதுமக்கள் உள்பட யாரும் நுழையக்கூடாது என்றும், கோவிலில் பூஜைகள் செய்ய பூசாரிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், இன்று பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த ஆறு பேர் வீதம் கோவிலில் நுழைந்து பூஜைகள் செய்து வழிபட அதிகாரிகள் அனுமதி அளித்து இருந்தனர். ஆனால், தாழ்ந்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தவிர வேறு சமூகத்தினர் வரவில்லை. தற்போது, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டவர்கள் கோவில் முன்பு கூடினர். மாவட்ட எஸ்.பி., தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தாழ்ந்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 6 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தியது குறிப்பிடதக்கது.
இந்த கோவில் பிரச்சனை தொடர்பாக ராசிபுரம் காவல் ஆய்வாளர், நாமகிரிப்பேட்டை காவல் ஆய்வாளர், மற்றும் பேளுக்குறிச்சி ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்தில் வந்து பிரச்சினை தொடர்பாக பொதுமக்கள் இடத்தில் பேசினர்.
தொடர்ந்து அதிகாரிகளின் ஏற்பாட்டில் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு தொடர்ந்து பட்டியல் இன சமூகத்தினர் உள்ளே சென்று கோவில் கதவை திறந்து தேங்காய், பழம் தட்டு வைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். தொடர்ந்து பல ஆண்டுகள் கழித்து உள்ளே சென்ற பெண் பக்தர்கள் சாமியாடி ஆக்ரோசமாக அருள்வாக்கும் கூறினர். தொடர்ந்து பதட்டமான சூழ்நிலையை ஏற்பட்டதால் கோவிலைச் சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.