புஸ்வாணமாகிய ஊழல் புகார்கள் ஏமாற்றத்தில் அண்ணாமலை

Update: 2023-07-27 12:06 GMT

அண்ணாமலை 

தமிழ்நாட்டில் எப்படியாவது கட்சியை வளர்க்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஆளும் திமுக அரசு மீதும் திமுக அமைச்சர்கள், எம்.பிக்கள், நிர்வாகிகள் மீது தொடர்ந்து அவதுறு பரப்பி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு திமுக அமைச்சர்கள் உள்ளிட்ட  12 பேரின் சொத்து பட்டியல் என்று சில விவரங்களை ‘டிஎம்கே ஃபைல்ஸ்’ என்ற பெயரில் வீடியோ பதிவாக  அண்ணாமலை வெளியிட்டார். இதில், திமுகவினரின் சொத்து மதிப்பு ரூ.1.34 லட்சம் கோடி என்று அவர் தெரிவித்தார். இதையடுத்து அவர் மீது திமுக தரப்பில் இருந்து அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது டிஎம்கே ஃபைல்ஸ் பார்ட்-2’ என்ற பெயரில் சில ஆவணங்களை பெரிய இரும்பு பெட்டியில் வைத்து ஆளுநர் ரவியிடம் அண்ணாமலை நேற்று வழங்கினார்.

ரூ.5,600 கோடி மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களை ஆளுநரிடம் வழங்கி உள்ளதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்ததாகவும் அண்ணாமலை தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக, 16.16 நிமிடம் ஓடும் ‘டிஎம்கே ஃபைல்ஸ் - 2’ என்ற வீடியோவை வெளியிட்டார். அதில் திமுக ஆட்சியில் தொழில் துறை அமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது, எல்காட் நிறுவனத்தின் துணை நிறுவனமான எல்நெட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பங்குகள் அனைத்தும் படிப்படியாக தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில், ரூ.3000 கோடி ஊழல் நடந்துள்ளதாகவும் கூறினார். போக்குவரத்து துறையில், பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக போலி நிறுவனங்களின் பெயரில் ஒப்பந்தம் வழங்கப்பட்டு, ரூ.2,000 கோடி ஊழல் நடந்துள்ளது.

திமுக 2021-ல் ஆட்சிக்கு வந்தபிறகு, மீரட் நகரை சேர்ந்த பாராமவுன்ட் பெஸ்டிசைட்ஸ் நிறுவனம் சென்னையில் இருப்பதாக போலி ஆவணங்களை வைத்து, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் பூச்சிக்கொல்லி மருந்து விநியோகத்துக்கான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது. இதன்மூலம் ரூ.600 கோடி ஊழல் நடந்துள்ளது. இதற்கு திமுக அரசு பதில் அளிக்கவேண்டும் அண்ணாமலை கூறினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் மீதும் அவரது அமைச்சர்கள், எம்பிக்கள் மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்களை தெரிவித்தது மூலம் மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்படும், அதிருப்தி ஏற்படும், அது பாஜகவுக்கு பலமாக இருக்கும் என்று அண்ணாமலை கணக்கு போட்டார் ஆனால், அவரது கணக்குகள் அனைத்தும் தவிடு பொடியாக்கிவிட்டது. அதற்கு காரணம் அண்ணாமலையின் ஒரவஞ்சனையான நிலைப்பாடு தான். ஊழலுக்காக சிறை தண்டனை பெற்று, இரண்டு முறை முதல்வர் பதவியை இழந்த மறைந்த ஜெயலலிதாவின் பாதையில் ஆட்சி செய்த எடட்பாடி பழனிசாமி & கோவின் ஊழல்கள் பற்றி பேசாமல், அதிமுகவின் ஆதரவுக்காக காத்திருக்கும் அண்ணாமலை, திமுக மீது மட்டும் ஊழல் புகார்களை தெரிவிப்பதால் அவரது அறம் கேள்விக்குறியாகி விட்டது. அதிமுக என்றால் பம்முவதும், திமுக என்றால் பாய்வதும் என்ற அண்ணாமலையின் அரசியலை மக்கள் நிராகரித்து இருக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ஊழல்வாதிகளுடன் கைகோர்த்து கூட்டணி வைத்துக்கொண்டு, ஆளுங்கட்சி மீது ஊழல் புகார்களை தெரிவித்து வரும் அண்ணாமலையின் அரசியல் நாடகமாகி விட்டதாக மக்கள் பேசுகிறார்கள்.

திமுகவின் முதல் ஊழல் பட்டியலை வெளியிட்டபோது ஏற்பட்ட பரபரப்பு, இரண்டாவது ஊழல் பட்டியல் வெளியிட்ட போது எவ்வித சலசலப்பும் இல்லாமல் நீர்த்துப்போய் விட்டது. ஒரு கண்ணில் வெண்ணெய், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு என்று வலம் வரும் அண்ணாமலையின் ஓரவஞ்சனை அரசியலுக்கு மக்களிடம் வரவேற்பு இல்லாமல் போய் விட்டதால் அவர் ஏமாற்றத்துடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே என் மண், என் மக்கள் என்ற பெயரில்  ராமேஸ்வரத்தில் இருந்து நாளை அண்ணாமலை நடைபயணத்தை தொடங்குகிறார். அண்ணாமலை நடைபயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்க உள்ளார். இவ் விழாவில் பங்கேற்பதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு அண்ணாமலை அழைப்பு விடுத்திருக்கிறார். முதல் தலைவராக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அண்ணாமலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு  அழைத்துள்ளார். ஆனால்,நடைபயண தொடக்க விழாவில் பங்கேற்க EPS மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அண்ணாமலை கடும் அதிருப்தியுடன் உள்ளார்.

Tags:    

Similar News