நாமக்கல் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்
அமைச்சர் மா.மதிவேந்தன் தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 27.3.2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அளித்த விளக்கத்தில், “மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்” இரண்டு நோக்கங்களைக் கொண்டது. பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது. அடுத்து, ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு சமூகத்தில் அவர்கள் வாழ்வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதாகும்.
மகளிரின் சமூகப் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அறிவிக்கப்பட்டிருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் என்பது, குடும்பத் தலைவிகளுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், அதிகாலையில் கடற்கரை நோக்கி விரைந்திடும் மீனவ மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள், வணிகம் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர், ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியக்கூடிய பெண்கள் என பல்வேறு வகைகளில் தங்கள் விலைமதிப்பில்லா உழைப்பைத் தொடர்ந்து வழங்கி வரும் பெண்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறுவார்கள் என்றும், இந்த மகத்தான ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ ஏறத்தாழ ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிடும் வகையில் அமைந்திடும் என்றும் அறிவித்தார்.
தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின் விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 24.7.2023 அன்று தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தில் மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் பெற 24.07.2023 முதல் 4.08.2023 வரை முதல் கட்டமாகவும், 5.08.2023 முதல் 14.08.2023 வரை இரண்டாவது கட்டமாகவும், மேற்சொன்ன இரண்டு கட்டங்களிலும், விடுபட்டவர்களுக்கு 18.08.2023 முதல் 20.08.2023 வரை சிறப்பு முகாம் வழியாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டன.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இணைந்து கொள்ள 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசிற்கு வந்துள்ளது. அவற்றில் தகுதியுள்ள 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000/- அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு 18.09.2023 முதல் அனுப்பி வைக்கப்படும். பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த நாளான இன்று, அவர் பிறந்த காஞ்சிபுரத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில், மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் தமிழ்நாட்டின் வரலாற்றில் மிகப் பெரிய திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்து, 13 மகளிருக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினார். இந்த திட்டத்திற்காக இந்த ஆண்டுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், சுஜிதா திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா தலைமை தாங்கினார். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் நாமக்கல் பெ.ராமலிங்கம், சேந்தமங்கலம் கு.பொன்னுசாமி, திருச்செங்கோடு ஈ.ஆர்.ஈஸ்வரன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் கலந்து கொண்டு , குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000/- பெறுவதற்கான கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட வங்கி பற்று அட்டைகளை வழங்கினார். இவ்விழாவில் இராசிபுரம் நகர்மன்றத் தலைவர் முனைவர் கவிதா சங்கர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.இராமசுவாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் செந்தில்குமார், ராசிபுரம் ஒன்றிய குழு தலைவர் கே.பி.ஜெகநாதன், நாமக்கல் வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவக்குமார், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் சரவணன், கூட்டுறவு சங்கங்கள் (இணைபதிவாளர்) த.செல்வகுமரன், மாவட்ட வழங்கல் அலுவலர் முத்துராமலிங்கம், பேரூராட்சி தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ்.ராஜேஷ் (வெண்ணந்தூர்), ரா.போதம்மாள் (பட்டணம்), பொ.சுமதி (ஆர்.புதுப்பட்டி), கொ.லோகாம்பாள் (சீராப்பள்ளி), இராசிபுரம் வட்டாட்சியர் சு.சரவணன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.