ஒரே நேரத்தில் 33 வார்டுகளில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

Update: 2023-07-24 05:31 GMT

பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில் ஒரே நேரத்தில் 33 வார்டுகளில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மக்கள் நலனிற்கு எதிராகவும், தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் தி.மு.க. அரசை கண்டித்து 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி குமாரபாளையத்தில் ஒரே நேரத்தில் 33 வார்டுகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தினசரி காய்கறி மார்க்கெட் எதிரில் நடந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட பொது செயலர் வக்கீல் சரவணராஜன் தலைமை வகித்தார். இவர் பேசியதாவது:

பிரச்சார சமயத்தில் அனைத்து மகளிருக்கும் மாதம் ஆயிரம் வழங்குவதாக கூறிவிட்டு, இப்போது தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் என்பது தி.மு.க.அரசின் ஏமாற்று வேலை, மத்திய அரசு திட்டமான வீடு கட்டும் திட்டம் மாநில அரசின் திட்டமாக பொய் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது, ஆறுகள் தோறும் தடுப்பணை என்று சொல்லிவிட்டு தற்போது அதற்கான முயற்சியில் ஈடுபடாமல் உள்ளது, கனிமவள கொள்ளை மாநிலம் முழுதும் நடந்து வருகிறது, அங்கன்வாடி மையங்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. குமாரபாளையத்தில் நன்றாக இருக்கும் பஸ் ஸ்டாண்ட் கட்டிடத்தினை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது அவசியமற்றது, புதிதாக கட்டப்பட்ட மார்க்கெட் கட்டிடம் தரமில்லாமல் கட்டப்பட்டு உள்ளது குறித்து அனைவரும் அறிவார்கள்.கள்ள சாராயம், கஞ்சா, ஒரு நெம்பர் லாட்டரிகளை தடுக்க முடியவில்லை, சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு உள்ளது, டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், தக்காளி உள்ளிட்ட உணவு பொருட்கள் விலை உயர்வை தி.மு.க. அரசு தடுக்க வேண்டும், மின் கட்டண உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வினால் மக்கள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இந்து கோவில்களை இடிக்கும் தி.மு.க. அரசின் மத விரோத போக்கு கண்டிக்கத்தக்கது, பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவேண்டும், அரசு மருத்துவ மனைகளில் போதிய டாக்டர்கள், பணியாளர்கள் நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். இதில் சரவணன், வக்கீல் தங்கவேல், ராஜா, ஆவின் சேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News