கார் புளிய மரத்தின் மீது மோதி இருவர் படுகாயம்
செம்பாம்பாளையத்தில், சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் இருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம், பாசூர் கிராமம், பழனி ஆண்டவர் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன்32. இவரும் அவரது மனைவி சுஜிதா24, மூன்று வயது மகன் செந்தூர், தம்பி தினேஷ்வரன்30, தாய் கலாவதி56, பெரியம்மா குணவதி60. ஆகியோருடன் ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு சென்று விட்டு ஈ.ஜி.ஓ., காரில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது, நேற்று அதிகாலை 3.30மணியளவில் மல்லசமுத்திரம் அடுத்த, செம்பம்பாளையம் பஸ்நிறுத்தம் அருகில் செல்லும் போது எதிர்பாராத விதமாக கார் சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது மோதியது. இதில், காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
காரை ஓட்டி வந்த தினேஷ்வரன், அவரது தாய் கலாவதி ஆகியோருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது. மற்றவர்களுக்கு உடலில் லேசான காயங்கள் ஏற்பட்டது. ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தூக்க கலக்கத்தில் தினேஷ்வரன் காரை ஓட்டியதால் விபத்து நடந்ததாக மல்லசமுத்திரம் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.