"நான் சாகிறேன்", வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்டு கட்டிடத் தொழிலாளி தற்கொலை.
தொழிலாளி தற்கொலை.
ராசிபுரம் அருகே கந்துவட்டி கும்பலின் தொடர் தொந்தரவால் வாட்ஸ் அப்பில் வீடியோ பதிவு செய்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கட்டிட தொழிலாளியின் உருக்கமான காணொளி தற்போது வைரலாகி வருகிறது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அச்சுக்கட்டி தெரு பகுதியைச் சேர்ந்தவர் சாகுல்ஹமீத் (42). கடந்த 20 ஆண்டுகளாக கட்டிட வேலை செய்து வரும் இவருக்கு ஒரு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவரிடம் வேலை செய்யும் பூபாலன் மற்றும் சிலர் கட்டிட வேலை செய்யும் இடத்தில் இரும்பு கம்பிகளைத் திருடி விற்றதாகக் கூறப்படுகிறது.
இதன் மதிப்பு சுமார் ஐந்து முதல் பத்து லட்ச ரூபாய் இருக்கும் என கூறப்படும் நிலையில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு ஒரு வீட்டில் திருடும்போது பூபாலுடன் இரண்டு பேர் பிடிபட்டனர். அப்போது அவர்கள் தாங்கள் திருடும் பங்கை முதலாளியான சாகுல் ஹமீதுக்கும் தருவதாக கூறியுள்ளனர். இப்பிரச்சனை காவல் நிலையம் வரை சென்றதால் தனக்கு அவமானம் ஏற்பட்டு விடும் என எண்ணி, பிரபாகரன் என்பவரிடம் அவசர அவசரமாக கந்து வட்டிக்கு பணம் வாங்கி உரிய நபர்களிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மீண்டும் இதே போல் வேறு ஒரு இடத்தில் திருடப்பட்ட பொருட்களுக்கு நீ தான் பணம் கட்ட வேண்டும் என சாகுல் அமீதை தொடர்ந்து சிலர் மிரட்டி வந்த நிலையில் கந்துவட்டி கும்பலுடன் பூபாலன் இணைந்து தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால் மனமுடைந்த சாகுல் ஹமீத் "தன்னால் முடியவில்லை" இனி எனக்கு எந்த வழியும் இல்லை என்னுடைய மரணத்திற்கு பூபாலன் மற்றும் பிரபாகரன் தான் காரணம் என வாட்ஸ் அப்பில் தன்னுடைய உறவினர்களுக்கு வீடியோ அனுப்பி விட்டு சேந்தமங்கலம் பிரிவு ரோடு சாலை அருகே ராஜேந்திரன் என்பவரின் கட்டிடம் கட்டும் பணியில் இருந்த போது அங்கேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த நாமகிரிப்பேட்டை போலீசார் சடலத்தை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு வைத்துள்ளனர். இந்நிலையில் சாகுல் ஹமீது இறப்பதற்கு முன்பு வெளியிட்ட வீடியோவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்கள் யார் என்று அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதியப்படப்படும் என காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுவரை வழக்கு பதியப்படாத நிலையில் சம்பந்தப்பட்ட நபர்களை விசாரித்த பின்பே கந்துவட்டி கொடுமையா அல்லது திருட்டுப் பட்டம் கட்டியதால் மனம் நொந்து தற்கொலை செய்து கொண்டாரா என முழு விவரம் தெரியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.