அண்ணாமலை என்ன கடவுளா? தொடர் சர்ச்சையில் சிக்கும் பாஜக தலைவர் !
வைரலகும் ஆடியோ... அதிருப்தியில் பாஜக நிர்வாகிகள்...
விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் கலிவரதன் பாஜகவிலுள்ள நிர்வாகிகளுக்கு எதுவுமே தெரியாது என தகாத வார்த்தைகளால் பேசிய செல்போன் உரையாடல் வெளியாகி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜ.க தலைவராக இருப்பவர் வி.ஏ.டி.கலிவரதன். முகையூர் எனும் சட்டமன்றத் தொகுதி இருந்தபோது, அங்கு பா.ம.க சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாக பதவி வகித்தவர். சில வருடங்களுக்கு முன்பாக கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பா.ம.க-விலிருந்து விலகி பா.ஜ.க-வில் ஐக்கியமானார். தற்போது விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜ.க தலைவராக இருந்து வருகிறார்.
பா.ஜ.க பெண் நிர்வாகி ஒருவர் இவர்மீது அளித்த பாலியல் புகார்; கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது கட்சிப் பிரமுகர் ஒருவரின் மனைவி, இவர்மீது அளித்த கொலை மிரட்டல் புகார்; ' அண்ணாமலை என்ன கடவுளா? ' என்ற ஆடியோ சர்ச்சை என தொடர்ந்து கட்சி வட்டார சர்ச்சையில் சிக்கிவரும் இவர்தான், தற்போது மீண்டுமொரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். இவர் தனது கட்சியிலுள்ள பெண் நிர்வாகிளிடம் ஆபாசமாக பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தினார். இதனால் மாவட்ட பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து கடந்த ஒரு வருடத்திற்கு முன் நீக்கப்பட்டு அதன் பிறகு விழுப்புரம் மாவட்ட பாஜகவை வடக்கு மாவட்டம் தெற்கு மாவட்டம் என இரண்டாக பிருந்து தெற்கு மாவட்ட பாஜக தலைவராக விஏடி கலிவரதனும் வடக்கு மாவட்ட தலைவராக ஏடி.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், கட்சி பொறுப்பு நியமனம் தொடர்பாக, பா.ஜ.க-வின் விழுப்புரம் மாவட்ட ஐ.டி பிரிவு தலைவர் பிரபாகரன் என்பவர் வி.ஏ.டி.கலிவரதனிடம் செல்போனில் பேசியதாகத் தெரிகிறது. அந்த ஆடியோ தற்போது கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது. வி.ஏ.டி.கலிவரதன் பேசுவதாகக் கூறப்படும் அந்த ஆடியோவில், "இந்த பா.ஜ.க-வில் இருப்பவனுங்களுக்கு எல்லாம் எந்த பொறுப்பு என்ன பவர் என்றெல்லாம் தெரியாமல் இருக்குது. நோகாமல் பொறுப்பு வாங்கிட்டு, ஏமாத்திட்டு போயிடலாம்னு பாக்குறானுவ. பொறுப்புக்கான பவர், இன்னா எதுன்னு தெரியாம இருக்கானுவ" என்றும், தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியும் பேசும்படியாக அமைந்திருக்கிறது.
இது குறித்து கலிவரதனை மொபைல்ஃபோனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, நான் எதையும் போனில் பேச விரும்பவில்லை எனக்கூறி அழைப்பை துண்டித்து விட்டார்.
இதுபோன்ற பல்வேறு சர்ச்சையிலும் வழக்குகளில் சிக்கி வரும் விழுப்புரம் மாவட்ட தலைவர் கலிவரதன் மீது தற்போது வரை பாரதிய ஜனதா கட்சியின் மேலிடப் பொறுப்பாளர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.