மோகனூர் வட்டாரத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்-மாவட்ட ஆட்சியர் ச.உமா ஆய்வு
நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம், கோனூர் கிராமத்தில் இந்தியன் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் பயிற்சி பெறுபவர்களுக்கான சுமார் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் தங்கும் விடுதி கட்டடம் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா ஆய்வு மேற்கொண்டார்.
மோகனூர் வட்டம், காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் தங்கபாண்டியன் மகன் மற்றும் மகள் ஆகியோர் தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, அவர்களுக்கு மோகனூர் வட்டம், பேட்டப்பாளையத்தில் ரூ. 9.00 இலட்சம் மதிப்பீட்டில் 430 சதுர அடி பரப்பளவில் வீடு கட்டும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு விரைந்து முடிக்க வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், பனைமரத்துபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ”நமக்கு நாமே திட்டத்தின்” கீழ், ரூ.14.25 இலட்சம் மதிப்பீட்டில் வகுப்பறை மேற்கூரை, பேவர் பிளாக், சுற்று சுவர், கதவுகள் பழுதுபார்க்கும் பணி உள்ளிட்ட கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை ஒப்பந்த காலத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு வழங்க உத்தரவிட்டார். தொடர்ந்து, முதலமைச்சரின் காலை உணவு தயாரிக்கும் கூடத்தினை ஆய்வு மேற்கொண்டு, மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், மாணவ, மாணவியர்களின் வருகை உள்ளிட்ட விபரங்களை விரிவாக கேட்டறிந்தார். ஒருவந்தூர் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.29.20 இலட்சம் மதிப்பீட்டில் ஒருவந்தூர் மெயின் ரிங்ரோடு மேம்பாடு பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஒருவந்தூர் கிராமத்தில் உள்ள மளிகை கடைகளில் தடைசெய்யப்பட்ட நெகிழிகள் பயன்படுத்துப்பட்டு வருகிறதா என ஆய்வு மேற்கொண்டு, நெகிழி பயன்படுத்தப்பட்ட கடைக்கு ரூ.500/- அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
மேலும், தடைசெய்யப்பட்ட நெகிழியினால் ஏற்படும் விளைவுகள் குறித்து கடையின் உரிமையாளர்களுக்கு எடுத்துரைத்து, அறிவுரை வழங்கினார்.
மோகனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட உதவி மையத்தை பார்வையிட்டு, பொதுமக்களிடமிருந்து வரபெற்ற அழைப்புகள் விபரங்களை பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதை ஆய்வு மேற்கொண்டார்.