மல்லசமுத்திரம் அருகே நாய்கள் அட்டகாசம் - மக்கள் அவதி:
கருங்கல்பட்டி அக்ரஹாரம் கிராமம், அண்ணாநகரில் நாய்கள் அட்டகாசத்தால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மல்லசமுத்திரம் ஒன்றியம், கருங்கல்பட்டி அக்ரஹாரம் பஞ்சாயத்து, அண்ணாநகரில், பத்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித் திரிகின்றது. இந்த நாய்கள், சாலையில் செல்லும் பொது மக்களையும், சிறுவர்களையும் துரத்திக் கொண்டு செல்கின்றது. இதனால், அவர்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகி ஓடி ஒழிந்து செல்கின்றனர். ஒரு சிலரை துரத்திக் கொண்டு சென்று கடித்தும் விடுகின்றது. குறிப்பாக, சாலையின் நடுவில் அங்கும் இங்குமாக செல்வதால் வாகன ஓட்டிகள் இந்த நாய்களின் மீது விழுந்து உடலில் சிராப்பு காயங்கள் ஏற்பட்டு எழுந்து செல்லக்கூடிய அவல நிலை நீடித்து வருகின்றது. இதனால், இப்பகுதி பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
ஆகவே, சுற்றித் திரியும் தெருநாய்களை பிடித்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.