ஸ்டாலின் பயணம்... அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..

திட்டம் என்ன?... வீட்டில் குவிந்த அதிகாரிகள்.... தி.மு.கவில் அடுத்த பரபரப்பு

Update: 2023-07-17 05:40 GMT

சென்னை மற்றும் விழுப்புரத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீடுகள், மகன் கவுதம சிகாமணி எம்பி வீட்டிலும் அமலாக்கத்துறை திடீர் சோதனை மேற்கொண்டிருக்கின்றனர்.

காலை 7 மணி முதல் 50 பேர் கொண்ட குழு சோதனை நடத்தி வருகிறது. விழுப்புரத்தில் உள்ள அமைச்சரின் வீட்டிலும் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

ஏற்கெனவே, தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் கடந்த ஜூன் மாதம் 13-ம் தேதி திடீர் சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் அன்றிரவே அவரைக் கைதுசெய்தனர்.

அதன்பின்னர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி, இதய அறுவை சிகிச்சை, நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல் என அரங்கேறிய நிகழ்வுகளுக்குப் பின்னர், செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம் , `செந்தில் பாலாஜி சட்டத்துக்கு உட்பட்டவர். அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்' என உத்தரவிட்டது. இது அமலாக்கத்துறைக்கு சாதகமாக அமைந்திருக்கும் இந்த வேளையில் தான், தற்போது அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டிருக்கின்றனர்.

பொன்முடிக்கு தொடர்புடைய 9 இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. சைதாப்பேட்டை தி நகர் இல்லம், சென்னையில் உள்ள பொன்முடி மகன் இல்லம், விழுப்புரம் இல்லம் உள்ளிட்ட 9 இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

முன்னதாக 1996 - 2001 காலகட்டத்தில் பொன்முடி போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது நில அபகரிப்பு மோசடியில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து இந்த மாத தொடக்கத்தில் தான் விடுவிக்கப்பட்டார்.

மேலும் 2006-11ம் ஆண்டு காலகட்டத்தில் கனிம வளத்துறை அமைச்சராக பொன்முடி இருந்தார். அவர் அமைச்சராக இருந்தபோது அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக 2012ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. 2012ல் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

வெளிநாடுகளில் முதலீடு தொடர்பாக அமைச்சர் பொன்முடி மகன் கௌதம சிகாமணியில் ரூ.8.6 கோடி மதிப்பிலான சொத்துக்களை ஏற்கனவே அமலாக்கத்துறை முடக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இந்த ரெய்டுக்கான அதிகாரபூர்வ காரணத்தை அமலாக்கத்துறை சொல்லவில்லை என்றாலும் பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் இந்த ரெய்டு நடப்பதாக கூறப்படுகிறது. கருப்பு பணத்தை வெள்ளையாக்கியதன் கீழ் இந்த ரெய்டு நடப்பதாக கூறப்படுகிறது.

சென்னையில் பொன்முடி இல்லத்தில் மட்டும் மொத்தம் 50 அதிகாரிகள் குவிந்து உள்ளனர். அவரின் அலுவலகத்திலும் பல அதிகாரிகள் குவிந்து உள்ளனர்.

துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் பாதுகாப்புப்படை வீரர்கள் பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. விரைவில் சோதனைக்கான காரணம் குறித்த அறிக்கையை அமலாக்கத்துறை அதிகாரிகள் வெளியிடுவார்கள் என்று கூறப்படுகிறது.

அமைச்சர் பொன் முடி இப்போது எந்த இல்லத்தில் இருக்கிறார் என்ற தகவல் வெளியாகவில்லை. முதல்வர் ஸ்டாலின் இன்று பெங்களூர் பயணம் மேற்கொள்கிறார். காலை பெங்களூர் செல்லும் அவர் அங்கே நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க செல்கிறார். 24 எதிர்க்கட்சிகளுக்கு கூட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. நாளை வரை இந்த கூட்டம் நடக்க உள்ளது. தேசிய அளவில் மாநில கட்சிகள், எதிர்க்கட்சிகள் பாஜகவிற்கு எதிராக கைகோர்க்க தொடங்கி உள்ளன. திமுக, காங்கிரஸ் , ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலை ஒன்றாக எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை செய்தனர். இந்த நிலையில்தான் தற்போது தமிழ்நாட்டில் அமலாக்கத்துறைக்கு ரெய்டு முடுக்கி விடப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News