சிப்காட் திட்டத்தை கைவிடக்கோரி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்
நாமக்கல் அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி செப். 15 ல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினர் அறிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுக்காவில் உள்ள, வளையப்பட்டி, பரளி, என்.புதுப்பட்டி, அரூர் சுற்றுப்புற பகுதிகளில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்காக, வருவாய்த் துறை மூலம் நில அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மோகனூர் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி சிப்காட் எதிர்ப்பு இயக்கம் என்று அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்புடன் பல்வேறு அரசியல் கட்சியினரும், விவசாயிகளும் இணைந்து சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே மனு கொடுக்கும் போராட்டம், மெழுவர்த்தி ஏந்தி போராட்டம், மனித சங்கிலி, நாமம் போட்டு போராட்டம், தீர்த்தக்குட போராட்டம், அக்னி சட்டி போராட்டம், புத்தகம் வாசிக்கும் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதுவரை இது குறித்து தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதன் தொடர்ச்சியாக கடந்த 15ம் தேதி, வலையப்பட்டி, என் புதுப்பட்டி, அரூர் ஆகிய கிராம பஞ்சாயத்துக்களில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில், இப்பகுதியில் சிப்காட் அமைக்க வேண்டாம் என்ற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தின் அடுத்த கட்ட போராட்டமாக வருகின்ற 20 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளக்கு சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வேண்டி, மோகனூர் அருள்மிகு நாவலடியான் கோயிலில் கோரிக்கை மனு எழுதி கட்டும் போராட்டம் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து வருகின்ற 26.8.2023 சனிக்கிழமை மாலை 5 மணி அளவில், வளையப்பட்டி, கஸ்தூரிமலை ரங்கநாத பெருமாள் ஆலயம் முன்பு நின்று திருக்கொடி ஏற்றி போராட்டம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து வருகின்ற செப். 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டம் நடைபெறும்.
மேலும் வருகின்ற செப். 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாள் அன்று காலை 9 மணி முதல் சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை ரத்துசெய்யும் வரை, சாகும் வரை தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினர் அறிவித்துள்ளனர்.