ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்ட விநாயகர் ஊர்வல பக்தர்கள்
குமாரபாளையத்தில் விநாயகர் ஊர்வல பக்தர்கள் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்டனர்.
குமாரபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் கொலு சிலைகள் நேற்று காவிரியில் விஜர்சனம் செய்ய கடைசி நாள் என மாவட்ட நிர்வாகத்தின் உத்திரவு என போலீசாரால் அறிவிக்கப்பட்டது. அதனால் நகரில் உள்ள 34 சிலைகள் இல்லாமல் பல பகுதி, பல ஊர்களில் இருந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் காவிரியில் விஜர்சனம் செய்யப்பட்டன. சேலம் சாலை முழுதும் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நேற்று காலை முதல் இரவு 10:00 மேல் ஆகியும் வந்து கொண்டே இருந்தன. நேற்று இரவு 09:30 மணியளவில், சேலம் சாலையில் விநாயகர் ஊர்வலம் களை கட்டிய நிலையில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விநாயகர் சிலைகள் ஏற்றி வந்த வாகனங்கள், ஒவ்வொரு வாகனங்கள் முன்பும் பேண்ட் வாத்தியங்கள் வாசிக்கும் கலைஞர்கள், அதற்கு ஏற்றார்போல் ஆடிவந்த பெண்கள் உள்ளிட்ட இளைஞர்கள் என பரபரப்பாக காணப்பட்டது. இந்த கூட்டத்தின் நடுவே ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று ஒலி எழுப்பியவாறு வந்தது. இதனை கண்ட ஒவ்வொரு பக்தர்களும், அம்புலன்ஸ் செல்ல வழிவிட்டு பின்னர் தங்கள் ஆட்டத்தை துவங்கினர். இதனை கண்ட மற்றவர்கள் கைகள் தட்டி ஆரவாரம் செய்து நன்றி தெரிவித்துக்கொண்டனர். உற்சாக மிகுதியில் ஆடிவந்தாலும், ஒருவரது உயிருக்கு ஆபத்து எனும் போது, அவருக்கு உதவுவதுதான் மனித நேயம் என்பதை எடுத்துக்காட்டியது தமிழர் பண்பை குறிப்பிடுவதாக அமைந்தது.