நூறுநாள் ஊதியம்: சிபிஎம் காத்திருப்பு போராட்டம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், வேலை பார்த்தவர்களுக்கு மாதக்கணக்கில் வழங்கப்படாமல் உள்ள சம்பளத்தை வழங்காத ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும், சம்பள பாக்கியை நிலுவையின்றி உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுக்கூர் ஒன்றியக் குழு சார்பில், மதுக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை காலை மனுக் கொடுத்து காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் வை. சிதம்பரம் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.கலைச்செல்வி காத்திருப்பு போராட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன் நிறைவுறையாற்றினார். இதில், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு, மூத்த தோழர் ஆர்.காசிநாதன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் எம்.அய்யநாதன், எல்.சின்னப்பொண்ணு, ஜெ.ஹரிதாஸ், எல்.முருகவேல், என்.பன்னீர்செல்வம், டி.பஞ்சாட்சரம், விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் ஏ.எம்.வேதாச்சலம் மற்றும் கிளை செயலாளர்கள், கட்சியினர், பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.
காத்திருப்பு போராட்டத்தில், "100 நாள் வேலை திட்டத்தில் மாதக் கணக்கில் வேலை பார்த்தவர்களுக்கு பல வாரங்களாகியும் சம்பளங்கள் வழங்கப்படாமல் உள்ளது. அதனை உடனடியாக வழங்க வேண்டும். தீபாவளி பண்டிகை காலத்தில் பொதுமக்கள் நலன் கருதி சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும். நூறுநாள் வேலைத் திட்டத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியும், 100 நாள் வேலை திட்டத்தை சீர்குலைக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும், முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. போராட்டத்தையடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜன் தலைமையில் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், தீபாவளிக்கு முன்னதாக சம்பள பாக்கியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து, காத்திருப்பு போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.