குமாரபாளையம் தாலுக்காவில் மாவட்ட ஆட்சித் தலைவர் திடீர் ஆய்வு
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம் கடந்த 2016 ஆம் ஆண்டு திருச்செங்கோடு வட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு குமாரபாளையம் தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் குமாரபாளையத்தில் தாலுகா அலுவலகம், வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தை சொந்த கட்டிடத்திற்கு மாற்றுவதற்காக குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்திற்கு அருகில் உள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் சொந்த கட்டிடம் கடந்த 2020 ஆம் ஆண்டு அடிக்கல் நட்டு கட்டுமான பணிகள் ஒரு கோடியை 40 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது.கட்டுமான பணி முடிவடைந்த நிலையில் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தேவையான மேஜை நாற்காலிகள் மற்றும் மாற்று திறனாளிகள் பயன்படுத்தக்கூடிய சர்க்கிள் சாலை உள்ளிட்டவை அமைக்கப்படாமல் இருந்து வந்தது. இதற்கு கடந்த ஆட்சி காலத்தில் ஒதுக்கப்பட்ட நிதி பற்றாக்குறை காரணமாக பணிகள் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில் தற்பொழுது பொதுமக்கள் மற்றும் பொதுநல ஆர்வலர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்த நிலையில், மீண்டும் சுமார் 70 லட்சம் செலவில் கட்டுமான பணிகள் செய்வதற்கு ஒதுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தற்போது தீவிரமாக புதிய வட்டாட்சியர் அலுவலகத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குமாரபாளையம் வட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் உமா சவுதாபுரம் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டுமான பணிகளை திடீர் ஆய்வு மேற்கொண்டு இந்த மாத இறுதிக்குள் அனைத்து பணிகளையும் முடிவடைத்து அரசுக்கு ஒப்படைக்க வேண்டும் என ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தினார்.