கொங்கு மண்டலத்தில் ஜவுளி தொழிலை காப்பாற்ற ஈஸ்வரன் எம்.எல்.ஏ. கோரிக்கை

Update: 2023-09-22 05:10 GMT

 ஈஸ்வரன் எம்.எல்.ஏ. 

கொங்கு மண்டலத்தில் வீழ்ச்சி அடைந்து வரும் ஜவுளி தொழிலை காப்பாற்ற ஈஸ்வரன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்து உள்ளார். இது குறித்து, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின், பொது செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று புகழ்பெற்று, ஜவுளித் துறையில் கொடிகட்டிப் பறந்த கோவை மாவட்டம் தற்போது தொழில்துறையில் நலிவடைந்து வருவதைப் பார்க்கும் போது வேதனை அளிப்பதாக உள்ளது. இந்த மாவட்டத்தின் அடிப்படை தொழில்கள் ஆட்டம் கண்டுள்ளது. பருத்தி உற்பத்தியில் நாட்டிலேயே கடைசி இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு 40 சதவீதம் பருத்தி பயிரிடும் நிலப்பரப்பு குறைந்துள்ளது. குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் தங்களின் பருத்தி உற்பத்தியை பல மடங்கு அதிகப்படுத்தியிருக்கும் போது தமிழ்நாடு பின் தங்கி விட்டது. மற்ற மாநிலங்களில் இருந்து பஞ்சு வாங்கித்தான் நமது நூற்பாலைகள் இயங்குகின்றன. ரெடிமேட் ஆடை ஏற்றுமதியில் பங்களாதேஷ் நாடு ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் 12.46 சதவீதம் ஏற்றுமதியை அதிகரித்துள்ளது.. இந்தியாவின் வீழ்ச்சி தான் பங்களாதேசின் வளர்ச்சி. பங்களாதேஷ் அரசின் கண்காணிப்பும், கவனமும் தான் அவர்களின் வளர்ச்சிக்கு காரணம். சமீப காலமாக பனியன் உற்பத்தி தொழிலின் வளர்ச்சி பங்களாதேஷில் அபரிமிதமாக உள்ளது.

பங்களாதேஷ் நாட்டில் நூற்பாலைகளுக்கு அரசு அதிகமான சலுகைகளை அளிக்கிறது. இதனால் அங்கு உற்பத்தி செலவு குறைவாக உள்ளது. இதனால் பல இந்திய நிறுவனங்கள் இந்தியாவில் தங்களின் ஆலைகளை மூடிவிட்டு பங்களாதேஷில் ஆலைகளை துவங்கியுள்ளன. இந்திய நாட்டில் ஜவுளி தொழிலுக்கு பாதிப்பு என்றாலும் அதிகமான பாதிப்பு திருப்பூருக்கும் தமிழ்நாட்டுக்கும் தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நிலை தொடர்ந்தால் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம் மாவட்டங்களில் ஜவுளி உற்பத்தி தொழில் மீள முடியாத வீழ்ச்சியை சந்திக்கும். இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள்.

மத்திய, மாநில அரசுகள் இதை கவனத்தில் கொண்டு ஜவுளித் தொழிலை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், இந்தியாவிலும், தமிழகத்திலும் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதை தடுக்க முடியாது. கொங்கு மண்டலத்தில் உள்ள பல ஜவுளி ஏற்றுமதியாளர்கள், வேறு வழியில்லாமல் பங்களாதேஷ் நோக்கிய பயணத்தை தொடங்கி விட்டார்கள். உடனடியாக அரசு தொழில் சார்ந்த சங்கங்களை அழைத்துப் பேசி மேல் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டுக்கு தேவை புதிய ஜவுளி பூங்காக்கள் அல்ல, நடந்து கொண்டிருக்கின்ற தொழிற்சாலைகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை அரசு உடனடியாக எடுக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News