கொல்லிமலை தாலுக்கா அலுவலகத்தில் அதிகாரிகள் பற்றா குறையால் பணிகள் பாதிப்பு
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை தாலுக்கா அலுவலகத்தில் அதிகாரிகள் பற்றா குறையால் பணிகள் பாதிப்பு, பழங்குடியின மக்கள் சான்றிதழ்கள் பெற அவதிப்படுகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் மூலிகைகள் அடங்கிய புகழ்பெற்ற சுற்றுலாதலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. இது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1300 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. கொல்லிமலையில் அறப்பளீஸ்வரர் கோவில், எட்டிக்கை அம்மன் கோவில், மாசி பெரியண்ணன் சுவாமி கோவில், மாசிலா அருவி, நம் அருவி, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, படகு இல்லம், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளது.
கொல்லிமலையில் 14 பஞ்சாயத்துக்கள் செயல்பட்டு வருகின்றது. கொல்லிமலை பகுதியில் அதிகளவில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். பழங்குடியின மக்களுக்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது. இந்நிலையில் பழங்குடியின மக்கள் கொல்லிமலை தாலுக்கா அலுவலகத்தில் கடந்த சில மாதங்களாக பட்டா மாறுதல், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், வருமான சான்று, சிறு, குறு விவசாயிகளுக்கான சான்றிதழ்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேவையான சான்றிதழ்கள் கேட்டு அலுவலகத்தில் மனுக்களுடன் விண்ணப்பித்துள்ளனர். அனைத்து சான்றிதழ்களும் தற்போது கிடப்பில் போட்பட்டுள்ளதாக தெரிகிறது. கொல்லிமலை பகுதியில் செயல்பட்டு வரும் 14 பஞ்சாயத்துகளின் கிராம நிர்வாக அலுவலர்கள் அலுவலகத்திற்கு பணிக்கு வருவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பழங்குடியின மக்கள் சான்றிதழ்கள் பெற முடியாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். கொல்லிமலை தாலுக்கா அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொல்லிமலை மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.