மணப்பள்ளி ஸ்ரீ பீமேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
மோகனூர் அருகே உள்ள மணப்பள்ளியில், ஸ்ரீ பீமேஸ்வரர் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகில் உள்ள மணப்பள்ளியில், பிரசித்தி பெற்ற ஸ்ரீ பீமேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இங்கு, பிரகன் நாயகி உடனுறை பீமேஸ்வரரர் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இக்கோயிலில், திருகல்யாண விழா மிகவும் விமரிசையாக நடந்தது. விழாவை முன்னிட்டு, காலை 7 மணிக்கு, சிறப்பு ஹோமம் நடந்தது. தொடர்ந்து, ஸ்ரீதேவி பூதேவி சமதே வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து, சீர் தட்டு எடுத்துக் கொண்டு, பக்தர்கள் ஊர்வலமாக வந்து, திருக் கோயிலை அடைந்தனர். விநாயகர், திரிபுரசுந்தரர், திபுரசுந்தரி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சிகள், வேத முறைப்படி, சிவாச்சாரியார்கள் விநாயகர் வழிபாட்டுடன் துவங்கி நடத்தினர்.
அப்போது, சுவாமிகளுக்கு கங்கணம் கட்டுதல், மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. அதையடுத்து, திருமாங்கல்யதாரண நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது. பின்னர் சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. மோகனூர் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம், ஸ்ரீ பீமேஸ்வரர் உழவாரப் பணிக்குழு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.