தரமற்ற பள்ளி கட்டுமானப் பணிகள்... அதிகாரிகளை லெப்ட் ரைட் வாங்கிய எம்.எல்.ஏ ஈஸ்வரன்!!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே தரமற்ற பள்ளி கட்டிட கட்டுமான பணியை பார்வையிட்ட, திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர் ஈஸ்வரன் அதிகாரிகளை கண்டித்துள்ளார்.
தமிழக அரசின் கல்வித்துறை மூலம், அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் 11, 12, வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, மல்லசமுத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளரும் திருச்செங்கோடு எம்.எல்.ஏ.வுமான ஈ.ஆர்.ஈஸ்வரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, மாணவ மாணவிகளுக்கு விலை இல்லா சைக்கிள்களை வழங்கி விழாவில் பேசினார். முன்னதாக அவர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பின்னர் அப்பள்ளியில், சிதிலமடைந்த நிலையில் உள்ள அறிவியல் ஆய்வகத்தை பார்வையிட்டார்.
ஏணி மூலம் மேற்கூரையில் ஏறி கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த அவர், கட்டுமானப் பணிகள் தரமாக நடைபெறாததால், கட்டிடம் சேதமடைந்து வருவதைக் கண்டு, அதற்கு காரணமான அதிகாரிகளைக் கண்டித்தார். கட்டுமான பணி சரியில்லை என கூறி சட்டமன்ற உறுப்பினர் கண்டித்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.