விவேகானந்தா மருந்தியல் மகளிர் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்
சங்ககிரி விவேகானந்தா மருந்தியல் மகளிர் கல்லூரியில் இரண்டு நாட்கள் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மருந்தியல் துறையில் புதுமையான முன்னேற்றம் வருங்கால மருந்தாளுனர்களை ஊக்குவித்தல் என்ற தலைப்பில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. கல்வி அறக்கட்டளையின் மேலாண்மை இயக்குனர் கிருஷ்ணவேணி கருணாநிதி குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் கல்லூரி முதல்வர் டாக்டர் க.ஆனந்தகுமார் வரவேற்புரையாற்றினார். கல்வி அறக்கட்டளையின் தாளாளர் டாக்டர் மு.கருணாநிதி வாழ்த்துரை வழங்கி விழாவினை சிறப்பித்தார். விவேகானந்தா துணை மருத்துவக் கல்லூரிகளின் இயக்குனர் டாக்டர் (கேப்டன்) எஸ்.கோகுலநாதன் சிறப்புரையாற்றினார். இக்கால மாணவர்கள் படிப்பது மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளிலும் தங்களை ஈடுபடுத்தி வருகிறார்கள். அவர்கள் இது போன்ற கருத்தரங்குளில் கலந்து கொண்டு பல்வேறு துறை வல்லுநர்களிடம் கலந்துறையாடினால் அவர்கள் அறிவை மேலும் வளர்க்கவும் மற்றும் புதுப்பித்துக் கொள்ளவும் வழி வகுக்கும் என்று கூறினார். மாருதி மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனையின் நீரிழிவு நோய் மருத்துவர் ஏ.எஸ்.செந்தில் வேல் மற்றும் மத்திய சித்தா ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை இயக்குனர் முனைவர் ஆர். இளவரசன் ஆகியோர் கருத்தரங்கு குறித்து பாராட்டி பேசினர். விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.வரதராசன் கருத்தரங்கின் தலைப்பு பற்றியும் அது எவ்வாறு மாணவர்களுக்கு பயன்படும் என்பது பற்றியும் எடுத்துக் கூறினார்.
இக்கருத்தரங்கில் மருந்துவர் ஏ.எஸ்.செந்தில் வேல் (மாருதி மெடிக்கல் கேர் சென்டர்), முனைவர் ஆர். இளவரசன் (மத்திய சித்தா ஆராய்ச்சி நிறுவனம்), முனைவர் டி.எஸ்.சண்முகராஜன் (விஸ்டாஸ்), முனைவர் பி.பாலகுமார் (பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்), முனைவர் என்.தட்சிணாமூர்த்தி (இன்னெக்ஸ் பயோ சைன்சஸ்), டாக்டர் பூ.தாரணி (மருந்தக கண்காணிப்பு அதிகாரி) மற்றும் முனைவர் எஸ்.விஜயராகவன் (தொமோ சைன்டிபிக்) ஆகியோர் “மருந்தியல் உலகை ஆராய்தல் - மூலக்கூறு முதல் மருத்துவம் வரை” என்ற கருவில் பல்வேறு கருத்துகளை பங்கேற்றவர்களுக்கு எடுத்துரைத்தனர். பல்வேறு மருந்தியல் கல்லூரிகளில் இருந்து வந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தி, சந்தேகங்களை தீர்த்து வைத்தனர். முதல் நாளில் பல்வேறு கல்லுரிகளில் இருந்து வந்து பங்கேற்ற மாணவ, மாணவியர்கள் தங்களது ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர். தகுதியான ஆராய்ச்சி கட்டுரைகளுக்கு பரிசும் தரச்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்தியா முழுவதும் உள்ள மருந்தியல் கல்லுரிகளின் மாணவ மாணவிகள் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் விவேகானந்தா சிறப்பு மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.அர்த்தநாரீஸ்வரன், இணை செயலாளர் க.ராகநிதி அர்த்தநாரீஸ்வரன், துணைத் தாளாளர் டாக்டர் மு.கிருபாநிதி, நிர்வாக இயக்குனர் டாக்டர் நிவேதனா கிருபாநிதி, நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.குப்புசாமி மற்றும் முதன்மை நிர்வாகி எம்.சொக்கலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். துறைத்தலைவர் டாக்டர் கே. கிருஷ்ணவேணி நன்றி கூறினார்.