குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணி சார்பில் தேசிய ஊட்டச்சத்து வாரவிழா கண்காட்சி
நாமக்கல்லில், குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் தேசிய ஊட்டச்சத்து வார விழா மற்றும் கண்காட்சி நடைபெற்றது.
நம்முடைய உடலுக்குத் தேவையான அடிப்படை ஊட்டச்சத்துக்கள் உடலின் தேவையைப் பூர்த்தி செய்து, உடலை நோயிலிருந்து பாதுகாக்கவும் நோய் வராமல் தடுக்கவும் செய்கிறது. நம்முடைய உடலுக்கு சில அடிப்படையான ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் கட்டாயமாகவும் தேவைப்படுகிறது. குறிப்பாக கர்ப்பினி பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், வளரிளம் பருவத்தினருக்கும் மூளை வளர்ச்சிக்காகவும் ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. அவற்றைப் பூர்த்தி செய்வதற்கான சத்தான உணவுகளை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இதை வலியுறுத்தும் வகையில், மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவைகள் மையம், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில், தேசிய ஊட்டச்சத்து வார விழா மற்றும் கண்காட்சி நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் டாக்டர் சாந்தா அருள்மொழி தலைமை தாங்கினார். மருத்துவமனை கண்காணிப்பாளர் குணசேகரன், குழந்தைகள் நலத்துறை அலுவலர் சுரேஷ்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் மாலதி, வித்யாலட்சுமி, அழகம்மாள் ஆகியோர், ஊட்டச்சத்து வார விழவின் முக்கியத்துவம், குழந்தைகளுக்கு தாய்பால் கொடுப்பதன் அவசியம், இணை உணவின் நன்மைகள், வளரிளம் பருவத்துக்கான உணவு வகைகள் குறித்து விளக்கி பேசினா்.
தொடர்ந்து, தானிய வகைகள், காய்கறிகள், பருப்பு வகைகள், கீரைகள், பழங்கள், செரியூட்டப்பட்ட இணை உணவு ஆகியவை இடம் பெற்ற ஊட்டச்சத்து கண்காட்சி நடைபெற்றது. அவற்றை, கர்ப்பிணி பெண்கள், வளரிளம் பருவத்தினர், சிறுவர்கள் என பலரும் பார்வையிட்டனர். பயிற்சி குழு மருத்துவர் மாலதி, மகப்பேறு குழந்தைகள் நல மருத்துவர் திருநாவுக்கரசு, அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.