முதியோர் ஓய்வூதியம் ₹1000-ல் இருந்து ₹1,200-ஆக உயர்வு
மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ₹1,500-ஆக உயர்வு. கைம்பெண்களுக்கான மாதாந்திர உதவித்தொகை ₹1,200. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு.
தமிழக முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் நிறைவில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் .
அப்போது பேசிய அவர், சமூக பாதுகாப்பு திட்டம் வாயிலாக வழங்கப்படும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட ஓய்வூதியங்கள் தற்போது வழங்கப்படும் ஆயிரம் ரூபாயில் இருந்து 1200 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது.
இந்திராகாந்தி தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் கைம்பெண்கள் , ஆதரவற்றோர் , கணவனால் கைவிடப்பட்டோர் , 50 வயதுக்கு மிகாமல் திருமணமாகாத ஏழைப்பெண்கள் மற்றும் இலங்கையில் இருந்து வந்தோருக்கு ஓய்வூதிய திட்டங்கள் தற்போது ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
அவர்களில் மாற்றுத்திறனாளிகளின் ஓய்வூதியம் ஏற்கனவே ஆயிரம் ரூபாயிலிருந்நு 1500 ஆக உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் முதியோர் பாதுகாப்பு திட்டம் உட்பட அனைத்து சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் இருப்போருக்கும் ஓய்வூதியம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது்
சமூகப் பாதுகாப்பு திட்டங்களின் கீழ் மொத்தம் 30 லட்சத்து 55 ஆயிரத்து 857 பயனாளிகள் மாதாந்திர ஓய்வூதியம் பெறுகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் 1200 ஆக ஓய்வூதியம் உயர்வு.
மேலும் 74 லட்சத்து 73 நபர்கள் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்து காத்திருப்போர் பட்டியலில் இருக்கின்றனர் , அவர்களில் தகுதியானோருக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும். ஓய்வூதிய அதிகரிப்பின் காரணமாக ஆண்டுக்கு 845.91 கோடி கூடுதல் செலவினம் அரசுக்கு ஏற்படும்.
கைத்தறித் துறை , தொழிலாளர் நலத்துறையின் கீழ் உள்ள 18 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் உறுப்பினர்களாக இருப்போரில் 1.34 லட்சம் பயனாளிகள் பயன்பெறுவர். கட்டட தொழிலாளர் வாரியத்தில் இருப்போருக்கும் ஓய்வூதிய உயர்வு பயன் தரும். தற்போது வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தில் 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு 300 ரூபாயையும் , அதற்கு கீழ் உள்ள வயதினருக்கு 200 ரூபாயையும் மத்திய அரசு வழங்குகின்றது , எஞ்சிய தொகை மாநில அரசால் வழங்கப்படுகின்றது.
கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட முகாம்கள் நடைபெற்று வருகிறது. மொத்தம் 3 கட்டமாக முகாம் நடைபெறும். முதல்கட்டமாக 21 ஆயிரத்து 31 முகாம்கள் நடைபெற்று வருகின்றன. 35, 925 முகாம்கள் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. ஏறத்தாழ 50 லட்சம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதி வாய்ந்த ஒரு பயனாளியும் விடுபட்டு விடக் கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக உள்ளார், மணிப்பூர் இதுவரை இல்லாதளவில் உலகளாவிய கவனம் பெற்றுள்ளது , முதலமைச்சர் கடும் கண்டனத்தை பதிவிட்டுள்ளார் , நாடாளுமன்ற த்தில் திமுகவினர் கண்டனம் எழுப்பி தீர்மானங்களை கொண்டுவருவர்.
நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை என்று கூறும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மணிப்பூர் குறித்து எந்த எதிர்ப்பையும் பதிவு செய்யவில்லை , இதில் அதிமுக இரட்டை வேடம் போடுகிறது. மணிப்பூரில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பு குறித்து தேவைப்பட்டால் முதலமைச்சர் தேவையான நடவடிக்கையை எடுப்பார்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களில் ஓய்வூதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் விதம் குறித்து கூர்ந்து ஆய்ந்து , முதலமைச்சரிடம் ஆலோசித்து உரிய முடிவு எடுப்போம் எனக் கூறினார்.