வரும் டிசம்பரில் நாடாளுமன்ற தேர்தலா? ஸ்டாலின் கடிதத்தால் பரபரப்பு!!

Update: 2023-07-24 11:45 GMT

ஸ்டாலின் கடிதம்

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான முதல்வர் ஸ்டாலின் கடிதத்தால் திமுகவினரிடையே புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ள அம்சங்கள் குறித்து விரிவாக காண்போம்.

திமுக தலைவரும், தமிழக முதல்வருமாகிய மு.க.ஸ்டாலின், தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் "முதல்வர் என்ற பொறுப்புக்குரியவனாகக் கடந்த இரண்டாண்டுகளாக ஓய்வின்றித் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன், ஒவ்வொரு நாளும் மக்களுக்குப் பயன் தரும் திட்டங்கள், புதிய அறிவிப்புகள் என ஆட்சி இயந்திரத்தின் சக்கரங்கள் பழுதின்றிப் பயணப்படும் வகையில் பணிகள் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், தமிழகத்திலும், புதுச்சேரியிலும் உள்ள நாற்பது தொகுதிகளிலும் கழகத்தின் தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெறுவதற்கான பணிகளை நாம் முன்னெடுத்து வருகிறோம். நாடாளுமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் கழகப் பொறுப்பாளரை நியமிக்கும் பணி நிறைவடைந்து, பூத் கமிட்டிகளும் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் முறையாக அமைக்கப்பட்டு, தலைமைக் கழகத்தால் ஆய்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் ஒரு கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியையும் கழக உடன்பிறப்புகள் முனைப்புடன் செயலாற்றி நிறைவேற்றித் தந்திருக்கிறார்கள் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மாநிலம் முழுவதுமுள்ள வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை ஒரே நேரத்தில் - ஒரே இடத்தில் சந்திப்பதைவிட, மண்டலம் மண்டலமாகச் சென்று சந்திப்பது பயன் தரும் என்பதால் முதற்கட்டமாக, தீரர்கள் கோட்டமாம் திருச்சி - கருமண்டபம் ராம்ஜி நகரில், டெல்டா மாவட்டங்களின் வாக்குச்சாவடி முகவர்களின் பயிற்சி பாசறை கூட்டம் வரும் 26ம் நாள் காலை 9 மணி முதல் நடைபெறவுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இப்பயிற்சி முகாமில் டெல்டா மாவட்டங்களில் உள்ள 15 கழக மாவட்டங்களில் இருந்து 12 ஆயிரத்து 645 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்புகூட திருச்சி சிறுகனூரில் ‘விடியலுக்கான முழக்கம்’ பொதுக்கூட்டம் மாபெரும் அளவில் - மகத்தான முறையில் வெற்றிகரமாக நடைபெற்று, கழகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் , திருப்புமுனை தரும் திருச்சி என்றாலே நேரு தான் என்று சொல்வதுபோல் நமது கழக முதன்மைச் செயலாளர் சிறப்பாக அந்தப் பொதுக்கூட்டத்தை நடத்தினார் என்று பாராட்டியுள்ளார்

அதேபோல் இம்முறையும் நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் விதத்தில் நடைபெறவுள்ள வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டமும் திருச்சியில் தொடங்கவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கின்றனவே, எதற்காக இப்போதே இந்தக் கூட்டம் என்று உடன்பிறப்புகளில் சிலர் நினைக்கலாம் என்று குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் பணிகள் தேர்தல் நாளன்று வாக்குகளைப் பெறுவதோடு முடிவடைந்து விடுவதில்லை. அரசுக்கும், கழகத்திற்கும், வாக்காளர்களுக்கும் பாலமாகச் செயல்படும் பெரும் பொறுப்பு வாக்குச்சாவடி பொறுப்பாளர்களிடமே உள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகள் போன்ற முக்கியமான பணிகளும் உள்ளன. புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட, இறந்துவிட்ட வாக்காளர்கள், தேர்தல் நாளன்று திடீரென ‘உயிர்த்தெழுந்து’ வந்துவிடாமல் பார்த்துக் கொள்வதும் முக்கியமானதாகும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

முந்தைய பத்தாண்டுகால அதிமுக ஆட்சியில், கழக ஆதரவு வாக்காளர்கள் பலரின் பெயர்கள் நீக்கப்பட்டு, போலி வாக்காளர்களை அதிகளவில் சேர்த்துள்ளதை அறிவோம் என்பதை நினைவு கூர்ந்துள்ள முதல்வர் ஸ்டாலின், களைகளை நீக்கி, பயிரினை வளர்க்கும் டெல்டா பகுதிக்காரர்கள் வாக்காளர் பட்டியலிலும் அந்தக் கடமையை நிறைவேற்றி, வெற்றியைச் சாகுபடி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கழகத்தின் வெற்றியை உறுதிசெய்யும் பொறுப்பும் கடமையும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களையே சேரும்.

தேர்தலின் மாபெரும் வெற்றிக்கு வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் பங்கு அளப்பரியது. கழகத்தின் வெற்றிக்கு நீங்கள்தான் அடிப்படை. எனவேதான் உங்களை இன்னும் கூர்மைப் படுத்தும் வகையில் இந்த மாபெரும் பயிற்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தேர்தலுக்கு முன்பு செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், தேர்தல் நாளன்று ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்தும் இப்பாசறைக் கூட்டத்தில் பயிற்சி அளிக்கப்படவிருக்கிறது.

சமூக ஊடகங்கள் பெருகிவிட்ட இக்காலக்கட்டத்தில் நாடு போற்றும் நல்லாட்சி நடத்தி வரும் கழகத்திற்கு அவப்பெயரை உருவாக்கும் வகையிலும், எங்கோ நடக்கும் நிகழ்வுகளை, வெட்டி ஒட்டி கழக ஆட்சியில் நடைபெற்றது போல பரப்பிடுவோரின் சதிச்செயல்கள் தேர்தல் நெருங்கவுள்ள சூழலில் இன்னும் தீவிரமாக நடந்தேறும் என்றும் முதல்வர் எச்சரித்து இருக்கிறார்.

அவற்றுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையிலும், சமூக வலைத்தளங்களில் முறையாக இயங்கிடும் வண்ணம் தயாராகும் விதமாக சமூக ஊடகங்கள் குறித்தான பயிற்சிகள் இக்கூட்டத்தில் வழங்கப்படவுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்..

எதிர்வரும் காலம் டிஜிட்டல் காலம் என்பதை உணர்ந்து, நீங்கள் ஒவ்வொருவரும் நடமாடும் ஊடகமாக மாறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்காகத்தான் இப்பயிற்சிக் கூட்டம். மக்களோடு நெருங்கிப் பழகுபவர்கள் - பழக வேண்டியவர்கள் நீங்கள்தான். மக்களின் பிரச்சினைகளையும், அவர்களின் தேவைகளையும் உள்ளபடியே அறிந்தவர்களும் நீங்கள்தான். இனி வருங்காலங்களில் கழக ஆட்சிக்கும் மக்களுக்குமான இணைப்பு பாலமாக நீங்கள் செயல்படப் போகிறீர்கள் என்று நெகிழ்ச்சியுடன் முதல்வர் கூறியுள்ளார்.

இப்பயிற்சிக் கூட்டத்தில் கலந்துகொள்வதோடு உடன்பிறப்புகளாகிய உங்களின் பணிகள் முடிவடைந்து விடுவதில்லை, உங்கள் வாக்குச்சாவடிக்குட்பட்ட தெருக்கள் தோறும் திண்ணைகள் தோறும் பரப்புரையை – கழகத்தின் சாதனைகளைக் கொண்டு சேர்க்க வேண்டிய மாபெரும் பொறுப்பு உங்களிடம் உள்ளது என்றும் முதல்வர்  வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தல் உரிய நேரத்திலும் வரலாம்,  முன்கூட்டியும் வரலாம். எப்போது வந்தாலும் சந்திக்கின்ற வலிமையுடன் நாம் இருக்க வேண்டும் என்ற வகையில் உங்கள் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுங்கள் என்று திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.

மக்கள் நலன் காக்கும் கழக ஆட்சியின் வெற்றியை 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் உறுதி செய்ய வேண்டும் என்றும், நாடாளுமன்றத் தேர்தல் களம் நம்மை அழைக்கிறது. ஜனநாயகம் காத்திடும் வீரர்களான கழக உடன்பிறப்புகளே ஆயத்தமாவீர். ‘இந்தியா’வின் வெற்றி நம் கையில் என்பதில் நம்மைவிடவும் உறுதியாக இருக்கும் அரசியல் எதிரிகள், அவதூறுகளைப் பரப்பிடவும், நெருக்கடிகளை உருவாக்கிடவும் தொடர்ச்சியான செயல்திட்டங்களை வகுத்து வைத்திருக்கிறார்கள் என்றும் முதல்வர் எச்சரித்துள்ளார்.

எத்தகைய சவால்களையும் வென்று சாதனைப் படைத்திடும் ஆற்றல் கழக உடன்பிறப்புகளுக்கு உண்டு. டெல்டாவில் அதற்கான முதல் களம் அமைந்துள்ளது. மற்ற மண்டலங்களிலும் விரைவில் உங்கள் அன்பு முகம் காண்பேன். நாற்பதும் நமதே! நாடும் நமதே! என்றும் முதல்வர் ஸ்டாலின் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

இதனால் திமுகவினர் உற்சாகமடைந்து களப்பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். முதலில் டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் கூட்டமும், அடுத்து மேற்கு மண்டலம், சென்னை மண்டலம், வடக்கு மண்டலம், தெற்கு மண்டலங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் பயிற்சிக் கூட்டங்கள் நடைபெற இருக்கிறது.

Similar News