திருச்செங்கோட்டில் அண்ணா திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
மாவட்ட செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில் அறிவிப்பு;
எஸ்.எம்.மதுரா செந்தில்
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில் விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு,
திராவிட இயக்க முன்னோடிகள் தந்தை பெரியார் அவர்கள், திராவிட இயக்க கொள்கைகளை தமிழ் மண்ணில் பட்டி தொட்டி எங்கும் பரப்பினார். கழகத்தை தோற்றுவித்து தமிழ் இனம், தமிழ் மொழி என்ற உணர்வுகளை ஊட்டி வளர்த்து தமிழர்களின் பாதுகாப்பு இயக்கமாம் இந்த மாபெரும் இயக்கத்தை ஆட்சி அரியணையில் அமர்த்தியவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.
தலைவர் கலைஞர் அவர்களை தொடர்ந்து தியாகத்தால் உழைப்பால் உயர்ந்த கழகத் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் உலகம் பாராட்டும் முதல்வராக திகழ்கிறார். பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சி பொறுப்பேற்று தமிழ்நாடு பெயர் மாற்றம், இரு மொழிக் கொள்கை, சுயமரியாதை திருமண சட்டம் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி காட்டினார்.
இன்றைக்கு தமிழினம் தலை நிமிர்ந்து நிற்கிறது என்றால் அதற்கு அண்ணா அவர்கள் தான் அடித்தளமிட்டவர். அத்தகைய ஆற்றலும், திறமையும், பண்பும், கனிவும் கொண்ட பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் செப்டம்பர் 15 ஆம் நாள். இந்த நாள் தமிழனுக்கு திருநாளாகும்.
நாமக்கல் மேற்கு மாவட்டம் திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 15 ந் தேதி வெள்ளிக்கிழமை காலை 8:30 மணிக்கு நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் மாவட்டக் கழக நிர்வாகிகள், திருச்செங்கோடு நகர, ஒன்றிய கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள், வார்டு கழக செயலாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அனைத்து சார்பு அணிகளின் மாவட்ட, நகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக முன்னோடிகள் வருகை தந்து சிறப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் நாமக்கல் மேற்கு மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கும், ஒன்றிய கிராமப் பகுதிகளில் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவப் படத்திற்கும் அந்தந்தப் பகுதிகளில் உள்ள ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்க வேண்டும். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள், வார்டு கழக செயலாளர்கள், கழகமுன்னோடிகள், கழக தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.