பறவைகள், விலங்குகள் வேட்டையாடுதலை தடுத்து நிறுத்த கிராமசபை கூட்டத்தில் மனு
நாடு முழுவதும் 77வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. அதனையொட்டி, அனைத்து பஞ்சாயத்துகளிலும் கிராமசபை கூட்டம் நடந்தது. அதன்படி, எலச்சிபாளையம் ஒன்றியம், பெரியமணலி கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் சமூக ஆர்வலரான பொன்னரசு மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக அளிக்கப்பட்ட மனு விபரம்:
பெரியமணலி பகுதியில் அறிய வகை பறவைகள் மற்றும் சிறு ஊர்வன விலங்குகள் சில மட்டுமே உள்ளன. அதை நமது பகுதி சில மக்கள் அறியாமையால் வேட்டையாடி வருகிறார்கள். அதை தடுக்கும் வகையில் 10 இடங்களில் விழிப்புணர்வு பதாகை வைக்க வேண்டும். மேலும், நமது ஊர் கடைகளில் வில்லு, அம்பு, கண்ணி போன்ற வேட்டையாடும் பொருட்களை விற்பனை செய்ய தடை செய்தும், பொதுமக்கள் அதை பயன்படுத்த தடை செய்தும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.