குமாரபாளையத்தில்போக்குவரத்து போலீசார் அதிகப்படுத்த கோரிக்கை
குமாரபாளையத்தில் போக்குவரத்து போலீசார் அதிகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமாரபாளையம் விசைத்தறி மற்றும் ஜவுளி உற்பத்தி தொழில் மிகுந்த நகரம். சுமார் 500 க்கும் மேற்பட்ட விசைத்தறி மற்றும் கைத்தறி கூடங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இது தவிர ஸ்பின்னிங் மில்கள், தானியங்கி விசைத்தறி கூடங்கள், இரண்டு தொழிநுட்ப பூங்காக்கள் உள்ளிட்ட பல வியாபார நிறுவனங்கள் உள்ளன. மேலும் 30 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் பல்லாயிரம் பேர் கல்வி பயின்று வருகிறார்கள். இவர்கள் காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரையிலும், மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரையிலும், குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு, ராஜம் தியேட்டர், கத்தேரி பிரிவு, கௌரி பைபாஸ் ஆகிய பகுதிகளில் அதிகம் கடந்து செல்வார்கள். இந்த நேரத்தில் போக்குவரத்து போலீசார் யாரும் இல்லாமல் இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு பலரும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். ஆகவே இந்த முக்கியமான இடங்களில், குறிப்பிட்ட நேரங்களில் போக்குவரத்து போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும், என மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட செயலர் காமராஜ் தலைமையில், மகளிரணி அமைப்பாளர்கள் சித்ரா, மல்லிகா உள்ளிட்ட பலர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமாவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.