பெட்டி கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை: ரூ.35 ஆயிரம் அபராதம்
அரசின் தடையை மீறி, பெட்டி, மளிகை கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு, ரூ. 35 ஆயிரத்து 300 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா உத்தரவின்படி, எருமப்பட்டி, திருச்செங்கோடு மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில், மளிகை மற்றும் பெட்டிக் கடைகளில், அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து, கடந்த 2 நாட்களாக, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது குறித்து சோதனை மேற்கொண்டனர்.
3 ஒன்றியங்களிலும், 30 கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், 5 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்து, கடை உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ. 35 ஆயிரத்து, 300 அபராதம் விதிக்கப்பட்டு, போலீசார் மூலம் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, அரசு அதிகாரிகள் கூறியதாவது, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் இருந்து, 100 மீட்டர் சுற்றளவிற்கு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது. மீறி விற்பனை செய்தால், சம்பந்தப்பட்டர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களும், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வது தெரிய வந்தால், 1098 மற்றும் 94861 11098 ஆகிய தொலைபேசி எண்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவரின் ரகசியம் பாதுகாக்கப்படும் என கூறினர்.