தி.மு.க அமைச்சர்கள் அனைவரும் தூங்குகிறார்களா, இல்லையா! செல்லூர் ராஜூ காட்டம்

“அண்ணாமலையை பார்த்து அதிமுகவுக்கு பயமா? அதிமுகவினர் குண்டுக்கே பயப்படாதவர்கள் - செல்லூர் ராஜூ

Update: 2023-07-08 10:26 GMT

மதுரை கோரிப்பாளையம் அதிமுக மாநகர் கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெற உள்ள அதிமுகவின் மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியபோது “மதுரையில் நடைபெறும் அதிமுக வெற்றி மாநாடு மிகக்சிறப்பாக நடைபெறும். இந்தியாவில் எழுச்சிமிக்க மாநாடாக அதிமுகவின் மாநாடு நடைபெற உள்ளது.

அதிமுகவின் மதுரை மாநாடு ஒரு வரலாறாக அமைய இருக்கிறது. கட்சி துவங்கிய காலத்தில் இது ஒரு நடிகரின் கட்சி 50 நாள் கூட நீடிக்காது என்று எல்லாம் பேசினார்கள் ஆனால், 31 ஆண்டுகாலம் ஆட்சியைக் கொடுத்து, அதிக நாட்கள் ஒரு மாநிலத்தை ஆண்ட இயக்கமாக அதிமுக உள்ளது. ஜெயலலிதாவும் எம்ஜிஆரும் மதுரையை நேசித்தார்கள். அவர்களின் வாரிசான எடப்பாடி பழனிசாமியும் மதுரையை நேசிக்கிறார். 1 கோடியே 65 லட்சம் பேர் அதிமுகவில் இணைந்துள்ளனர். அதிமுகவில் சேர பொதுமக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இளைஞர்கள்கள், பெண்கள் அலை அலையாக வருகின்றனர்.

திமுகவின் பல்வேறு திட்டங்களால் அனைத்து தரப்பு மக்களும் பயனடைந்து உள்ளனர். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் நீட் தேர்வில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதன் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மருத்துவம் பயின்று வருகின்றனர். தொகுதிக்கு 25 ஆயிரம் நபர்கள் வீதம் அதிமுக மாநாட்டில் பங்கேற்க ஏற்பாடு செய்து வருகிறோம். மதுரையில் மற்றொரு சித்திரை திருவிழா காண இருக்கிறோம்.

மகளிர் உதவித் தொகை 1000 அனைத்து குடும்ப அட்டைக்கும் கொடுப்போம் என தேர்தல் வாக்குறுதியில் கூறியுள்ளார்கள். ஆனால், எப்படி கொடுக்கப் போகிறார்கள் என தெரியவில்லை. சொல்வது ஒன்று,செய்வது ஒன்றாக திமுக அரசு செய்து வருகிறது. மக்களுக்கு தக்காளியே மறந்துபோகும் நிலை உள்ளது. ரசத்திலும் சாம்பாரிலும் தக்காளி போட முடியாத நிலை உள்ளது. தக்காளி விலை உயர்ந்ததால் மக்கள் தக்காளியை மறந்து போய் உள்ளனர். அதிமுக ஆட்சிக்காலத்திலும் காய்கறி விலை ஏற்றம் இருக்கும். ஆனால் அதனை சமாளிக்க முன்கூட்டியே திட்டம் வகுப்போம். இந்த அரசு கமிஷன், கரப்சன் என்பதை நோக்கியே உள்ளது. அமைச்சர்கள் அனைவரும் தூங்குவார்களா இல்லையா என தெரியவில்லை. எப்பொழுது அமலாக்கத்துறை வரும், ஐடி துறை வரும் என யோசித்துக் பயந்து போய் இருக்கிறார்கள். முதல்வரும் குடும்பம் செந்தில் பாலாஜி வாய் திறந்து விடுவாரோ பயந்து போய் இருக்கிறது என்றார்.

மதுரையின் மைந்தனாக இருக்கக்கூடிய பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஏதோ ஒரு மூலையில் இருக்கிறார் அவரை கண்டுபிடிங்கள். மக்கள் போட்ட பிச்சையால்தான் திமுகவினர் அமைச்சர், எம்.எல்.ஏ என பதவியில் இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் பிச்சை போட்டோம் என அமைச்சர்கள் வாய் கொழுப்பாக பேசி வருகின்றனர் என்றார்.

மேலும் அண்ணாமலையை பார்த்து அதிமுக பயப்படுகிறது என்று அதிமுகவில் இருந்து விலகிய நபர் பேசியது குறித்த கேள்விக்கு, “நாங்க எவனுக்கும் பயப்பட மாட்டோம். துப்பாக்கி குண்டுக்கே பயப்படாதவர்கள் நாங்கள். நாங்கள் எவனுக்கும் பயப்பட வேண்டாம். தொண்டையில் குண்டை வைத்துக் கொண்டு பயமின்றி வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர். அந்தக் கட்சியைச் சேர்ந்த நாங்கள் எவனுக்கும் எதற்கு பயப்படப் போகிறோம்” என்றார்.

Tags:    

Similar News