செப் 7 ல் மாநிலம் தழுவிய போராட்டம் - சிபிஎம் மாநிலச்செயலர் பாலகிருஷ்ணன் பேட்டி

Update: 2023-08-29 10:32 GMT

பாலகிருஷ்ணன் பேட்டி

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்து, தமிழகம் முழுவதும் செப்.7ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடைபெறும் என, அதன் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

நாமக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அளவிலான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் தவறான கொள்கையால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக பெட்ரோல், டீசல் மீது மிக அதிகமான வரி விதித்துள்ளனர். லாரி போக்குவரத்தில் நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டண வசூல் என்பது பகல் கொள்ளையாக உள்ளது. சிஏஜி அறிக்கையில் டோல் கொள்ளை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை வரி, சாலை போக்குவரத்து, ஜிஎஸ்டி போன்றவை விலைவாசி உயர்வுக்கு காரணமாக அமைகிறது. நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் இந்தியா வல்லரசாக மாறப்போகிறது என உலகம் முழுவதும் பிரதமர் மோடி பேசி வருகிறார். ஆனால், இந்தியாவில் வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது. மத்திய அரசு அலுவலகம், பொதுத்துறை அலுவலகங்களில் 10 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது. ரயில்வே துறையில் 3.50 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது. ராஜ்யசபாவில் இதுபற்றி தெரிவிக்கப்பட்டது, ஆனால் மத்திய அரசு காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கவில்லை.

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் 1 லட்சம் பங்கேற்கக் கூடிய வகையில் செப். 7ம் தேதி சிபிஐஎம் சார்பில் மத்திய அரசு அலுவலகங்கள் முன் போராட்டம் மற்றும் ரயில் மறியல் போராட்டமும் நடத்தப்பட உள்ளது. இதுபோல் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும்.

அகில இந்திய அளவில் எதிர்கட்சிகள் ஒன்றாக இணைந்திருப்பது நல்ல மாற்றத்திற்கான அறிகுறியாக மக்கள் பார்க்கின்றனர். சமீபத்தில் நடைபெற உள்ள 3 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வீழ்த்தப்படும் என்ற நம்பிக்கையான செய்திகள் வருகின்றன. 2024ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் தமிழகம் மட்டுமல்ல நாடு முழுவதும் பாஜகவுக்கு பெரிய அடி விழும்.

தமிழகத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை நடைப்பயணம் மேற்கொண்டாலும், மதுரையில் எடப்பாடி மாநாடு பழனிசாமி நடத்தினாலும் மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. தமிழகத்தில் அதிமுக அதன் செயல்திறனை இழந்துள்ளது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் மீது சிஏஜி ரூ. 7.50 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின்கட்கரி போன்றவர்கள் பதில் எதுவும் சொல்லவில்லை என்று கூறினார்..

Tags:    

Similar News