ஆளாளுக்கு அரசியல் பேசும்போது நாங்க பேசக்கூடாதா?
அண்ணாமலைக்கு சுடச்சுட பதிலடி கொடுத்த தமிழிசை
தமிழகத்தில் பாஜகவை வளர்ப்பதில் இதற்கு முன்பு மாநில தலைவர்களாக இருந்தவர்களை விட, அண்ணாமலை தலைவரான பிறகு தமிழ்நாட்டில் பாஜக கிராமங்கள் தோறும் வளர்ந்து வருகிறது என்று பாஜக வட்டாரம் பேசுகிறது. முன்பு மாநில தலைவர்களாக இருந்தவர்கள் காங்கிரஸ் பாணியில் ஆமை வேகத்தில் செயல்பட்டதாகவும், திராவிடக் கட்சிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும் புகார் கூறிவரும் பாஜகவின் ஒரு பிரிவினர், அண்ணாமலையின் அதிரடி அரசியல் தீப்பொறியாக பறக்கிறது என்று கூறிவருகிறார்கள். அண்ணாமலை தலைமையில் தமிழகத்தில் பாஜக எழுச்சி பெற்று வருகிறது என்பதை அண்மையில் வேலூரில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளிப்படையாக பாராட்டினார். பாஜகவின் அதிகார மையமான அமித்ஷாவின் பாராட்டுகளை தொடர்ந்து, அண்ணாமலையின் வேகம் பல மடங்கு அதிகரித்து இருக்கிறது.
இந்நிலையில் சமீபத்தில் விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம், தெலுங்கானா ஆளுனர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனைப் போல, தமிழக ஆளுநர் ரவியும் ஊடகங்களுடன் அடிக்கடி தொடர்பு கொள்ள வேண்டுமா என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அண்ணாமலை,
தமிழகத்தின் ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஆளுநர் பதில் சொல்ல அவர் அரசியல்வாதி அல்ல. ஆளுநர் அரசியல் பேசக்கூடாது . ஆளுநர் அவரது கடமையை மட்டுமே செய்ய வேண்டும் என்று கூறினார். மேலும், ஆளுநர் செய்தியாளரை சந்திப்பது தவறான முன்னுதாரணமாகிவிடும். இதை ஏன் திமுக புரிந்து கொள்ள மறுக்கிறது.
ஆளுனர் செய்தியாளர்களை சந்திக்கக் கூடாது, அரசியல் பேசக்கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு. அது தவறான முன்னுதாரணமாக அமையும் என்பதே எனது கருத்து என்று கூறிய அண்ணாமலை, சட்டசபைக்குள் ஒரு அரசாங்கத்தை விமர்சிக்க ஆளுநருக்கு உரிமை உண்டு. தினமும் எதிர்வினையாற்றுவது அவர்களின் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் என்று கூறினார்.
இச்சூழலில் ஆளுனர் அரசியல் பேசக்கூடாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு பதிலளித்த தெலுங்கானா ஆளுனர் தமிழிசை சவுந்திரராஜன், ஆளுநருக்கு போஸ்டர் ஒட்டி கண்டிக்க கூடிய போஸ்ட்டிங் கிடையாது. ஆளாளுக்கு அரசியல் பேசும் போது ஏன் ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்று பதில் கேள்வி எழுப்பிய அவர். ஆளுநர்கள் அரசியல் பேசலாம். அரசியல் இல்லாமல் ஏதுவும் கிடையாது. அரசியல் தலைவர்கள் அரசியல் பேசும்போது, ஆட்சித் தலைவர்களும் அரசியல் பேசலாம் என்று விளக்கமளித்தார். ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்று அண்ணாமலை பேசினால் அது அவருடைய கருத்து.நீங்க சொன்னதை தான் ஆளுநர் பேச வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதேபோல் என்னை எதிலும் அடைக்கமுடியாது. எனக்கும், புதுச்சேரி முதல்வருக்கும் அண்ணன் - தங்கை உறவு தான் என்று தமிழிசை சவுந்திரராஜன் விளக்கமளித்தார்.
அண்ணாமலைக்கு தமிழிசை சுடச்சுட பதிலடி கொடுத்தது மட்டுமின்றி என்னை எதிலும் அடைக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார். இதற்கு பின்னணியில் அதிகார அரசியலும் தேர்தல் அரசியலும் இருப்பதாக பேசப்படுகிறது. அதாவது வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 25 தொகுதிகளில் பாஜக அணி வெற்றி பெறும் என்று அண்ணாமலை கூறி வருகிறார். அதில் முக்கியமான தொகுதி கன்னியாகுமரி ஆகும். இங்கு பாஜக வேட்பாளராக மீண்டும் போட்டியிட முன்னாள் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்கு அண்ணாமலையும் முழு ஆதரவு அளித்துள்ளார். அதே நேரத்தில் கன்னியாகுமரி என்னுடைய சொந்த தொகுதி, வரும் தேர்தலில் நான் கன்னியாகுமரி தொகுதியில் தான் போட்டியிடுவேன் என தமிழிசை சவுந்திரராஜன் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் தேர்தல் அரசியலுக்கு வர அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்தால், அதற்கு எதிர்வினையாற்றும் முடிவில் தமிழிசை இருப்பதாக தெரிகிறது. இதனால் தான் தன்னை எதிலும் அடைக்க முடியாது என்று தமிழிசை சூடாக பதிலடி கொடுத்து இருக்கிறார். ஆளுனர் பொறுப்பில் இருப்பவர் மீண்டும் தேர்தல் அரசியலுக்குள் நுழைய அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்து வருவதால், அவரையும் அவரது கருத்தையும் ஆளுனர் தமிழிசை சவுந்திரராஜன் விமர்சித்து வருகிறார். இந்த மோதல் நாடாளுமன்ற தேர்தல் வரை நீடிக்கும் என்று பேசப்படுகிறது.
தெலுங்கானா ஆளுனராக இருக்கும் தமிழிசை சவுந்திரராஜனும், தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலையும் தேர்தல் களத்தில் மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல, ஒரு முறை கூட தேர்தலில் வென்றவர்கள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.