கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பங்கள் சரிபார்க்கும் கள ஆய்வு அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம்
எம்.பி - ஆட்சியர் - எம்.எல்.ஏ பகேற்பு
நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பங்கள் சரிபார்க்கும் கள ஆய்வு அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில் நடைபெற்றது. இதில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாம் கடந்த மாதம் 7 ந் தேதி தொடங்கி விண்ணப்பப் பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாகவும் மற்றும் விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்களும் தொடர்ந்து நடத்தப்பட்டு 20.08.2023 அன்றுடன் விண்ணப்பங்கள் பதியும் பணி நிறைவடைந்தது.
முதற்கட்ட முகாம்கள் ஜுலை 24 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 04 ஆம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 05 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடைபெற்றது. விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்கள் ஆகஸ்ட் 18, 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இம்முகாம்கள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி, முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட தகவல்களை தேவையேற்படின் சரிபார்க்க கள ஆய்வு மேற்கொள்ள நாமக்கல் மாவட்டத்தில் 8 வட்டங்களில் 914 கள ஆய்வு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கள ஆய்வின் போது, சரிபார்ப்பு பணிகள் குறித்த பயிற்சி கூட்டம் இன்றையதினம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், மோகனூர் வட்டாட்சியர் மணிகண்டன் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.