போதமலை மலைவாழ் மக்கள் கோரிக்கை ஏற்று சாலை அமைக்கும் பணி துவங்கப்படும்

ரூ.140 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி விரைவில் துவங்கப்படும் - கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தகவல்

Update: 2023-07-22 11:30 GMT

கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தகவல்

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் போதமலை மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.140 கோடி மதிப்பில் 31 கி.மீ தொலைவிற்கு சாலை அமைக்கும் பணி விரைவில் துவங்கப்படும் என கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது:

தமிழ்நாடு அரசின் கோரிக்கையினை ஏற்று நபார்டின் கடன் திட்டமான RIDF நிதியின் கீழ், 112 கோடி ரூபாயும், மாநில அரசின் பங்களிப்பாக 28 கோடியும் ஆக மொத்தம் ரூ. 140 கோடி மதிப்பீட்டில் போதமலைக்கு வடுகம் முதல் கீழூர் வழியே மேலூர் வரையிலும், புதுப்பட்டி முதல் கெடமலை வரையிலும் மொத்தம் 31 கிமீ தொலைவிற்கு புதியதாக சாலை அமைக்கும் பணிக்கு நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

போதமலை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாலை அமைத்திட வேண்டும் என்பது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தல் வாக்குறுதியாகவும் கூறியிருந்தார். போதமலை பகுதிக்கு சாலை அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களுக்கும், இந்த பகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், வனத்துறை அமைச்சருமான மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்களுக்கும் நான் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் என்ற வகையிலும், இந்த ஊராட்சி ஒன்றிய பகுதியை சேர்ந்தவன் என்ற வகையிலும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஊராட்சிக்குட்டபட்ட கீழுர் ஊராட்சியில் போதமலை மலை கிராமம் உள்ளது. போதமலையில் கீழூர், மேலூர், கெடமலை இந்த மூன்று குக்கிராமங்கள் உள்ளது. சுதந்திர அடைந்த்து முதல் இன்று வரை இந்த மலை கிராமங்களுக்கு சாலை வசதிகள் இல்லை. மலைவாழ் மக்கள் வசிக்கக்கூடிய பகுதி. இங்கு ஏறத்தாழ 2000 ஹெக்டர் பரப்பளவில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக சிறுதானிய ஆண்டாக கடைபிடிக்கப்பட்டு வரும் வேளையில் போதமலை கிராமங்களில் சாமை, கேழ்விரகு, கம்பு, திணை, அரிசி ஆகியவை அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த மலைப் பகுதியில் ஆரம்ப பள்ளி, அங்கன்வாடி மையம் ஆகியவை உள்ளது. கடந்த திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் 1996 ஆம் ஆண்டு தான் மின்சார வசதியும் செய்து தரப்பட்டது. இந்த பகுதியில் ஏறத்தாழ 3,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றார்கள். போதிய சாலை வசதிகள் இல்லாத காரணத்தினால் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்துள்ளார்கள்.

இதன் அடிப்படையில் போதை மலை கிராமங்களில் சாலை வசதி அமைக்க கோரி கோரிக்கை மனுக்கள் வரபெற்று சாலை அமைக்கப்படமால் இருந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு தற்போது இந்த பகுதியில் சாலை அமைப்பதற்கான தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மலைக் காடுகளில் சாலை அமைக்க வேண்டுமென்றால் புதுதில்லி, உச்சநிதிமன்றத்தில் ஒரு அங்கமாக உள்ள பசுமை தீர்ப்பாயத்தில் ஒத்திசைவு பெற்று தான் ஒன்றிய அரசின் வனத்துறையில் சாலை அமைக்கும் பணிக்கு அனுமதி பெற முடியும். இதனையொட்டி 2021 ஆம் ஆண்டு நான் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுத்த பிறகு வெண்ணந்தூர் ஒன்றியக் கழகச் செயலாளரும், ஒன்றியக் குழு செயலாளருமான ஆர்.எம்.துரைசாமி பெயரில் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில் பசுமை தீர்பாயம் சாலை அமைக்கும் பணிகளுக்காக அதற்கு இணையாக வேறு இடத்தில் மரத்தை நடவு செய்து பராமரிக்க தேவையான நிதியினை வைப்பு தொகையாக செலுத்த வேண்டும் என பல்வேறு விதிமுறைகளுடன் சாலை அமைக்க அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டது.

அதன்படி நாமக்கல் மாவட்டம், மங்களபுரம் ஊராட்சிக்குட்டபட்ட உரம்பு பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் 18 ஹெக்டர் பரப்பளவில் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சாலை அமைக்கும் பணிக்கு இணையாக மரங்களை நடவு செய்து பராமரிப்பதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதி நிதியிலிருந்து ஏறத்தாழ ரூ.2.13 கோடி ரூபாய் ஒன்றிய வனத்துறைக்கு செலுத்தப்பட்டுள்ளது. பசுமை தீர்ப்பாயத்தின் மரங்களை பராமரிப்பு நிதி உள்ளிட்ட விவரங்களோடு முன்மொழிவு அனுப்பப்பட்டு ஒன்றிய வனத்துறை மற்றும் மாநில அரசு வனத்துறை அனுமதி பெறப்பட்டுள்ளது.

பசுமை தீர்ப்பாயம் ஒன்றிய அரசின் வனத்துறை, தமிழ்நாடு அரசின் வனத்துறை ஆகிய துறைகளிடம் அனுமதி பெற்று போதமைலை பகுதிக்கு சாலை அமைக்கும் பணிக்கு அனுமதி அளிக்கப்பட்ட பிறகு மாவட்ட ஊராட்சி துறை, வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் மூலம் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு நானும், வனத்துறை அமைச்சர் மருத்துவா் மா.மதிவேந்தன் அவர்களும் கொண்டு சென்றோம். இந்த கோரிக்கையினை ஏற்று நபார்டு திட்டத்தின் மூலம் ரூ. 112 கோடியும், மாநில அரசின் பங்காக ரூ. 28 கோடி என மொத்தம் ரூ. 140 கோடி மதிப்பிலான நிதி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய முயற்சிகளினால் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டம், வடுகம் முதல் கீழுர் வழியே மேலூர் வரை 21.17 கிமீ தொலைவிற்கும், புதுப்பட்டி முதல் கெடமலை வரை 9.9 கிமீ தெலைவிற்கும் சாலைகள் அமைக்கும் பணிக்கு தமிழ்நாடு அரசால் ரூ. 140 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பல்வேறு ஆய்வு கூட்டங்களில் மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இத்திட்டத்தினை நிறைவேற்றிட வேண்டும் என்று வலியுறுத்தியதன் அடிப்படையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலைமைச்சர் அவர்களின் ஒப்புதலோடு இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

போதைமலையில் சாலை அமைக்கும் பணிக்காக ரூ. 9.73 இலட்சம் மதிப்பீட்டில் எல்லை நிர்ணயம் செய்திடும் பணியும், ரூ. 36.21 இலட்சம் மதிப்பீட்டில் காப்புக்காடுகளில் சாலை பணிக்கு அளவீடு செய்து எல்லை கற்கள் அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. போதமலை பகுதியில் சாலை அமைக்கும் பணிக்கு உறுதுணையாக இருந்த வனத்துறை அமைச்சர் மருத்துவா் மா.மதிவேந்தன் அவர்களுக்கும், இந்த திட்டத்திற்கு முன்மொழிவு அனுப்புவதற்கும், திட்டமதிப்பீடு தயார் செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்ட அப்போதைய மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா பி சிங் அவர்களுக்கும், தற்போதைய மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா அவர்களுக்கும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலர்களுக்கும், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

பேட்டியின் போது, வெண்ணந்தூர் ஒன்றிய கழக செயலாளரும், ஒன்றிய குழு உறுப்பினருமான ஆர்.எம்.துரைசாமி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஏ.ஆர்.துரைசாமி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் கனகராஜ், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அணி துணை அமைப்பாளர் விஜயபாஸ்கா், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், வனிதா, பஞ்சாயத்து தலைவர் அலமேலு, ஊர் கவுண்டர்கள் கப்பு காண்டி, அண்ணாமலை, அரப்பளி, கிளை செயலாளர்கள் குப்புசாமி, மாதேஸ்வரன், அண்ணாமலை, மாதேஷ், செல்வம், குப்புசாமி, கந்தசாமி, மணி, மாதேஸ்வரன், பழனிசாமி, தங்கராசு, மகளிர் அணி சித்ரா, மணிமேகலை, மாலதி, ஒன்றிய குழு வார்டு உறுப்பினர்கள் சத்யாவிக்னேஷ், பழனிசாமி, இளைஞர் அணி பாரத்சீலன், ராஜா, முகேஷ், குப்புசாமி, பூவரசன், ராஜா, கந்தசாமி, மாணவர் அணி ராஜா, குமார், பழனி, தங்கராசு, குப்புசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News