கறிக்கோழி விற்பனையாளர்களுக்கு பாதுகாப்பளிக்க, வியாபாரிகள் சங்கம் கோரிக்கை

Update: 2023-09-22 12:10 GMT

வியாபாரிகள் சங்கம் கோரிக்கை

தமிழகத்தில் சுத்தமான கறிக் கோழிகளை விற்பனை செய்து வரும்,கோழி வியாபாரிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோழி வணிகர்கள் கூட்டமைப்பினர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். சங்க மாநில தலைவர் துரைராஜ் கூட்டத்தில் கலந்து கொண்டு, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

தமிழகம் முழுவதும் சுமார் 1,500 கறிக் கோழி மொத்த விற்பனையாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான கறிக்கோழி சில்லரை விற்பனையாளர்கள் உள்ளனர். பல இடங்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு, இது ஒரு சுய தொழிலாக அமைந்துள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் 2 லட்சம் பேர் கறிக்கோழி விற்பனையாளர்களாக உள்ளனர். சிறிய கிராமங்களிலும், பலர் இதன் மூலம் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.

தமிழகத்தில் உறை நிலையில் பேக்கிங் செய்யப்பட்ட கோழிக் கறி விற்பனை செய்யப்படுவதில்லை. 95 சதவீதத்திற்கு மேல் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக சுத்தம் செய்யப்பட்ட கோழிகள் மட்டுமே விற்பனை செய்து வருகிறோம். தற்போது தமிழகத்தில் பெரும்பாலான இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் துரித உணவகங்களில் விற்பனை செய்யப்படும் ஷவர்மா, கிரில் சிக்கன், தந்தூரி சிக்கம் போன்றவற்றை விரும்பி சாப்பிடுகின்றனர்.

இது போன்ற உணவகங்கள் ஒவ்வொரு ஊரிலும் ஏராளமாக உள்ளன. எங்களிடம் சுத்தமான கோழிகளை வாங்கி செல்லும் ஃபாஸ்ட் ஃபுட் உணவக உரிமையாளர்கள் அவற்றில் பல்வேறு மசாலா பொருட்களை சேர்த்து, குளிர் நிலையில் உறைய வைத்து பின்னர் சூடாக்கி உணவு வகைகளை தயாரித்து வருகின்றனர். இதில் சில நேரங்களில் ரசாயண மாற்றங்கள் ஏற்பட்டு உணவு வகைகளின் தரம் பாதிக்கப்பட்டு, அதை சாப்பிடுபவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது.

இது போன்ற ஒரு நிகழ்வு சமீபத்தில் நாமக்கல்லில் ஒரு உணவகத்தில் ஏற்பட்டு ஒரு சிறுமி இறந்துள்ளார். இதையொட்டி, போலீசார் வழக்குப் பதிவு செய்து உணவக உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் இருவரையும் அந்த உணவத்திற்கு கோழிக்கறி சப்ளை செய்த கறிக்கோழி கடை உரிமையாளரையும் ஜாமீனில் வெளி வரமுடியாத பிரிவுகளில் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தரம்கெட்ட கோழி உணவு விற்பனைக்கும் கோழிக்கறி விற்பனையாளருக்கும் எவ்விதத்திலும் சம்மந்தம் இல்லை. இந்த நிகழ்வில் கறிக்கோழிக் கடை உரிமையாளரை கைது செய்தது நியாயமற்ற செயல். இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து கறிக்கடை உரிமையளர்களும் அச்சத்தில் உள்ளனர். ஏற்கனவே தமிழகத்தில் புரட்டாசி மாதத்தால் 50 சதவீதத்திற்கு மேல் கோழி விற்பனை பாதித்துள்ளது. இந்த நிலையில் இது போன்ற அச்சுறுத்தலால் இந்த தொழில் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் இது போன்ற ஷவர்மாவால் பிரச்சனை ஏற்பட்டதும், அந்த அரசு ஷவர்மா தயாரித்து விற்பனை செய்வதற்கு தனி அங்கீகாரம் மற்றும் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதே போன்ற நடைமுறைகளை தமிழகத்தில் அமல் படுத்த வேண்டும்.

அசைவ உணவகங்களை சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கண்காணித்து, அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். சுத்தமான தரமான கறிகோழிகளை மட்டுமே நேரடியாக விற்பனை செய்து வரும் கோழி வியாபாரிகளுக்கு தமிழக அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கூறினார்.

கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட கோழி விற்பனையாளர்கள் சங்க செயலாளர் புவனேஸ்வரன் உள்ளிட்ட திரளான சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News