புதுச்சத்திரத்தில் பெண்கள் உரிமைத் தொகை பதிவு முகாம்
அமைச்சர் மதிவேந்தன்ஆய்வு
புதுச்சத்திரம் பகுதியில், பெண்கள் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்களை, மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா முன்னிலையில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் வகையில், மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், தகுதியான பெண்களுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கும் திட்டம் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் முதற்கட்டமாக 611 ரேசன் கடைகளில் இருக்கும், ரேசன் கார்டுதாரர்களுக்கு ஜூலை 24 முதல் ஆக 4 ஆம் தேதி வரை விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெற்றன.
இதன் தொடர்ச்சியாக, இரண்டாம் கட்ட முகாம்கள் 303 ரேசன் கடைகளில் உள்ள, ரேசன் கார்டுதாரர்களுக்கு, ஆக. 5ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 9 ஆம் தேதி விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், தாத்தையங்கார்பட்டி பஞ்சாயத்தில் உள்ள, அரசு மேல்நிலைப்பள்ளி விண்ணப்ப பதிவு முகாமில், தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் திடீர் ஆய்வு செய்து உரிமைத் தொகை விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற விண்ணப்ப பதிவு முகாம்களையும், மாவட்ட சேர் மருத்துவர் ச.உமா முன்னிலையில் பார்வையிட்டார். ஆய்வின் போது, நாமக்கல் தாசில்தார் சக்திவேல், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.