மோகனூரில் சர்க்கரை ஆலை முன்பு பணியாளர்கள் உண்ணாவிரதம்
மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு, சர்க்கரை ஆலை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
உண்ணாவிரத போராட்டத்துக்கு, அண்ணா தொழிற்சங்க சர்க்கரை பிரிவு மாநில தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். ஐஎன்டியூசி பொதுச் செயலாளர் தியாகராஜன் வரவேற்றார். விவசாய முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் செல்ல.ராசாமணி, பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.
போராட்டத்தில் தமிழக கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில், கடந்த 1990 முதல் 33 ஆண்டுகளாக நிலவி வரும் இரட்டை ஊதிய முறையை அகற்றி ஒரே மாதிரியான சம்பளம் வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அலுவலர்களுக்கும், தொழிலாளர்களும் உள்ள சம்பள முரண்பாடுகளை கலைந்து, சமூக நீதி காக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் அனைத்து சர்க்கரை ஆலை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.