மக்களவை தேர்தலுக்கு பின்னர் திரிணாமுல் ஆட்சி கவிழ்ப்பா?: பாஜகவுக்கு மம்தா பதிலடி

Update: 2024-05-28 12:50 GMT

Mamta 

மக்களவை தேர்தலுக்கு பின்னர் மேற்குவங்கத்தில் திரிணாமுல் ஆட்சி கவிழ்க்கப்படும் என்று பாஜக தலைவர்கள் கூறியதற்கு முதல்வர் மம்தா பதிலடி கொடுத்துள்ளார். மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, ஜாதவ்பூர் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுகையில், ‘மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு திரிணாமுல் காங்கிரஸ் அரசின் நாட்கள் எண்ணப்படும் என்று பாஜக தலைவர்கள் பேசி வருகின்றனர். ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க அவர்களால் முடியாது. ஏனெனில் மக்களின் தீர்ப்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருக்கிறது.கடந்த ஆறு கட்டமாக நடந்த தேர்தலை பார்க்கும் ேபாது, பாஜகவுக்கு 200 இடங்கள் கூட கிடைக்காது. ‘இந்தியா’ கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கும். அதில் எங்களது கட்சி முக்கிய பங்கு வகிக்கும். மேற்குவங்கத்தில் பாஜகவை திரிணாமுல் கட்சி மட்டுமே எதிர்கொள்கிறது. ஆனால் காங்கிரசும், இடதுசாரி கட்சிகளும் பாஜகவுடன் ரகசிய உடன்பாடு வைத்துள்ளன. ஹிட்லர், கோயபல்ஸ் போன்ற சர்வாதிகாரப் போக்கை பாஜக கடைபிடிக்கிறது. முஸ்லிம்கள் மற்றும் எஸ்சி, எஸ்டி, ஓபிசிகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்த மோடி திட்டமிட்டுள்ளார். கடந்த 2010ல் கொண்டு வரப்பட்ட சில பிரிவினருக்கு வழங்கப்பட்ட ஓபிசி அந்தஸ்தை சட்டவிரோதமானது என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் கூறியது. நாங்கள் நீதித்துறையை மதிக்கிறோம். கோடை விடுமுறைக்குப் பிறகு ெகால்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்’ என்றார்.

Similar News