தமிழகத்தில் மே 16 முதல் 20 வரை கனமழை காரணமாக 11 பேர் உயிரிழப்பு: பேரிடர் மேலாண்மைத்துறை தகவல்
தமிழகத்தில் மே 16 முதல் 20 வரை கனமழை காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 12 கால்நடை இறந்துள்ளன. 24 குடிசைகள், வீடுகள் சேதமடைந்துள்ளன என்று பேரிடர் மேலாண்மைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.மார்ச் மாதம் முதல் மே மாதம் முடிய உள்ள கோடைக் காலத்தில் தமிழ்நாட்டிற்கு 12.5 செ.மீ. மழை இயல்பாக கிடைக்கப் பெறுகிறது. இவ்வாண்டு 1.3.2024 முதல் 20.5.2024 முடிய 9.63 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 7 விழுக்காடு குறைவாகும்.இன்று காலை 8.30 மணி வரை தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களில் மழைபொழிவு ஏற்பட்டுள்ள நிலையில், சராசரியாக 1.77 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதிகப்படியாக நாமக்கல் மாவட்டத்தில் 7.12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. பின்வரும் 42 மழைமானி நிலையங்களில் கனமழை முதல் மிக கனமழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் மிக கனமழை என்பது 11.56 செ.மீ முதல் 20.44 செ.மீ வரை பதிவாகும்.