தேர்தல் ஆணையம் மோடியின் கைப்பாவை: முத்தரசன் குற்றச்சாட்டு

ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் திருமாவளவனை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வாக்கு சேகரித்தார்.

Update: 2024-03-30 08:48 GMT

கூட்டத்தில் பேசும் முத்தரசன்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இந்தியா கூட்டணி சார்பில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் சன்னதி தெருவில் நடைபெற்றது.

கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரியலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கதிரவளவன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.  சிபிஐ மாவட்ட செயலாளர் ராமநாதன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முத்தரசன், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட தலைவர் சங்கர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் இளங்கோவன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மணிவேல், வெங்கடாசலம், அரியலூர் ஒன்றிய செயலாளர் அருண்பாண்டியன் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர மன்ற தலைவர் சுமதி சிவக்குமார்,

மதிமுக புகழேந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ராமநாதன் உட்பட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். திராவிடர் கழக மாநில பொதுக்குழு உறுப்பினர் காமராஜ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது, மனிதநேய ஜனநாயகக் கட்சி மாவட்ட செயலாளர் அக்பர் அலி, சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி மேலிட பொறுப்பாளர்கள் விடுதலைச்செழியன்,  பொதிநிவளவன்,

திருமார்பன், ஆசிரியர் செல்வராஜ் உட்பட விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகள் ஏராளமான கலந்து கொண்டனர். கூட்டத்தில் சிறப்புரையாற்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் முத்தரசன் பேசியதாவது:- எடப்பாடி பழனிசாமி பாஜகவை விட்டு விலகி விட்டதாக கூறுகிறார். நாடாளுமன்றத் தேர்தலில் ஒருவேளை அதிமுக வெற்றி பெற்றால் எடப்பாடி பழனிச்சாமி யாரை ஆதரிப்பார். இந்தியா கூட்டணி பிரதமர் வேட்பாளரை ஆதரிப்பாரா? அல்லது மோடியை ஆதரிப்பாரா? இதற்கு எடப்பாடி பழனிசாமி பதில் சொல்ல வேண்டும்.

நாங்கள் வெற்றி பெற்றால் சத்தியமாக மோடியை ஆதரிக்க மாட்டோம் என்று சொல்ல வேண்டும். கொள்கைக்காக போராடுகின்ற இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். சிதம்பரம் தொகுதியில் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து தெரியாமல் இருக்கிறோம்.

இதேபோன்று பல கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யவில்லை. தேர்தல் ஆணையம் எல்லோருக்கும் சம வாய்ப்பை அளிக்க வேண்டும். ஆனால் தேர்தல் ஆணையம்  மோடியின் கைப்பாவையாக செயல்படுகிறது. எங்களுக்கு பானை சின்னம் ஒதுக்கினாலும் சரி, ஒதுக்காவிட்டாலும் சரி திருமாவளவன் தான் இங்கு வெற்றி பெறுவார்.

சின்னத்தை முடக்குவதன் மூலமாக எதிரிகள் வெற்றி பெறலாம் என்று நீங்கள் கனவு காண்பீர்கள் ஆனால் தோற்றுப் போவீர்கள் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றார். நிறைவாக ஜெயங்கொண்டம் தொகுதி செயலாளர் இலக்கிய தாசன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News