அரசியலில் நுழைய விஜய்க்கு எதிர்ப்பு!

Update: 2023-08-10 06:10 GMT

விஜய்

அரசியல் களமிறங்க, மிக வேகமாக தயாராகி வரும் நடிகர் விஜய்க்கு, ஆளும் தி.மு.க.,வில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 'நலத் திட்டம் கொடுத்து விட்டு, நாலு சினிமாவில் நடித்து விட்டு, இரண்டு மன்றத்தை ஆரம்பித்து விட்டால், கட்சி துவக்கி விடலாமா?' என, விஜயை பகிரங்கமாக விமர்த்துள்ளார், தி,மு,க, அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி.

சேலம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில், ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது:

தி.மு.க.,வின் வரலாற்றை நான் சொல்லியாக வேண்டும். அப்படி சொல்லாத காரணத்தால் தான், எவன் எவனோ கட்சி ஆரம்பிக்கிறான்.

ஒரு நலத் திட்டத்தை செய்து விட்டு, நாலு சினிமாவில் நடித்து விட்டு, இரண்டு மன்றத்தை ஆரம்பித்து விட்டால், உடனே கட்சி ஆரம்பிக்க வேண்டிய எண்ணம் சிலருக்கு ஏற்படுகிறது.

அதற்கு காரணம் என்னவென்றால், தி.மு.க., வரலாறை முழுமையாக, இன்றைய தலைமுறைக்கு நாம் எடுத்து சொல்லவில்லை. 50 ஆண்டு காலத்திற்கு மேலாக, கட்சிக்கு தலைமை வகித்து வழி நடத்தியவர் கருணாநிதி.

அவருடன் இருந்த மாநில நிர்வாகிகள் என்றால், பொதுச்செயலர் துரைமுருகனும், பொருளாளர் டி.ஆர்.பாலுவும், நானும் தான்.நாங்கள் எல்லாம், 'மிசா'வில் இருந்தவர்கள். ஆனால் சிலருக்கு, 'மிசா' என்ற நெருக்கடி காலம் இருந்ததே தெரியவில்லை. கட்சியில் எப்படிப்பட்ட துன்பங்களை அனுபவித்தோம் என்பது, இளைய தலைமுறையினருக்கு தெரிய வேண்டும். அப்போது தான், அவர்கள் எந்த பதவியும் எதிர்பார்க்க மாட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

விஜயை சீண்டும் வகையில், ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு அமைந்துள்ளதால், அவருக்கு விஜய் ரசிகர்கள், சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து, விஜய் ரசிகர்கள் கூறுகையில், 'வரும் 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில், விஜய் விஸ்வரூபம் எடுக்க உள்ளார். விஜய் அரசியல் பிரவேசத்தை கண்டு, தி.மு.க.,வினர் பயந்து உள்ளனர்.

'மக்கள் இயக்க நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போட்டு, எங்களை நசுக்க பார்க்கின்றனர். அச்சுறுத்தலை கண்டு பயப்பட போவதில்லை. முன்வைத்த காலை பின் வைக்க மாட்டோம்' என்றனர்.

விஜய் மக்கள் இயக்கம் சார்பில், 'விஜய் பயிலகம்' என்ற பெயரில், 234 சட்டசபை தொகுதிகளில், இரவு பாடசாலை துவக்கப்பட்டுள்ளது. பள்ளி சென்று படிக்க முடியாத ஏழை, எளிய மாணவியர், 'விஜய் பயிலகம்' வாயிலாக படிக்க முடியும். இத்திட்டம் நல்ல விஷயம் என, அமைச்சர் துரைமுருகன் கூட கூறியிருந்தார். இந்நிலையில், தி.மு.க., மாணவர் அணிக்கு, அக்கட்சி தலைமை பிறப்பித்துள்ள உத்தரவில், 'தி.மு.க.,மாணவர் அணியுடன் இணைந்து, மீண்டும் மாணவர் மன்றம் செயல்பட வேண்டும்.

அனைத்து கல்லுாரிகளிலும், திராவிட கொள்கைகளை கொண்ட மாணவர்கள் வாயிலாக, மன்றங்கள் உருவாக்கப்பட வேண்டும். மாணவர் மன்றம், அரசியல் சார்பற்று மாணவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக செயல்பட வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நடிகர் விஜய், 2026 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து, கட்சி துவங்க ஆயத்தமாகி வருகிறார். இதற்காக, தன் மக்கள் இயக்க மாவட்ட செயலர்கள், வழக்கறிஞர் அணியினர் உள்ளிட்டோருடன், ஆலோசனை நடத்தி முடித்துள்ளார். விரைவில், மகளிர் அணி நிர்வாகிகளை சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார். இதற்கிடையே, மாநிலத்தில் உள்ள 234 தொகுதிகளிலும், பூத் ஏஜன்டுகளை நியமித்து விட்டதாக, அவரது மன்ற மாவட்ட நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை, 130 தொகுதிகளில் மட்டுமே, முழுமையாக பூத் ஏஜன்டுகள் நியமிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, விஜய் மக்கள் இயக்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களில் உள்ள, 104 தொகுதிகளில், ரசிகர் மன்றங்கள் முழுமையாக செயல்படவில்லை; பூத் ஏஜன்ட்களும் நியமிக்கப்படவில்லை.

பூத் ஏஜன்ட்களை நியமிக்கும் பணியை முழுமையாக முடிக்காமல், கட்சி துவங்கினால், பெரிய அளவில் சாதிக்க முடியாத நிலை ஏற்படும். இதுகுறித்து, விஜயிடம் சொல்லப்பட்டு உள்ளது. அனைத்து தொகுதிகளிலும் பூத் ஏஜன்ட்கள் இல்லை என்ற தகவல், விஜய்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, எஞ்சியுள்ள 104 தொகுதிகளில் பூத் ஏஜன்டுகளை நியமித்த பின்னரே, கட்சி தொடர்பான அறிவிப்பை, அவர் வெளியிட முடிவு செய்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News