தமிழர் நீதி கட்சி திமுக கூட்டணியை ஆதரிக்கும்: சுபா இளவரசன்
ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக பாராளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கும் திருமாவளவனை சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற தமிழர் நீதி கட்சி பாடுபடும் சுபா இளவரசன் தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரில் உள்ள தமிழர் நீதிக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற மாநில செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அக்கட்சியின் தலைவர் சுபா. இளவரசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாசிச பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறாமல் தடுக்கவும் பாசிச சக்திகள் தமிழகத்தில் வளர்ச்சியடையாமல் தடுக்கவும் தொடர்ந்து பாராளுமன்றத்தில் தமிழக மக்களின் நலனுக்காக குரல் கொடுக்க திமுகவால் மட்டுமே முடியும் என்பதால் திமுக கூட்டணிக்கு தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும்,
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஒரு பாராளுமன்ற தொகுதியிலும் தங்கள் ஆதரவை தருவதாக அவர் தெரிவித்தார் மேலும் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் தொகுதி மக்களுக்கு தேவையான விஷயங்களை எம்பி என்கிற நிலையில் செய்திருந்தாலும் இல்லாவிட்டாலும்,
பாராளுமன்றத்தில் தேசிய அளவில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கும் சக்தி மிகுந்த ஒரே தலைவராக திருமாவளவன் இருப்பதால் அவருக்கு சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திறந்த மனதுடன் ஆதரவு தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
வீரப்பன் மகள் வித்யா கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சிக்காக போட்டியிடுவது குறித்து கேள்வி கேட்கப்பட்டபோது வித்யாவுக்கு ஒரு போராளியின் மகளாக அரசியல் களத்தில் வெற்றி பெற வாழ்த்து தெரிவிக்கிறேன். அதே நேரத்தில் தமிழகத்தை பொறுத்த அளவில் பாசிச பாரதிய ஜனதா கட்சி ஒன்றே சாமானிய மக்களின் ஒரே எதிரி என்கிற நிலைப்பாட்டில் நாங்கள் இருப்பதால் தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிக்கு தீவிரமாக ஆதரவளித்து தேர்தல் பணியாற்றுவது என்கிற முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று தெரிவித்தார்.