வரலாற்று பாரம்பரிய சுற்றுலா - குஜராத்தை நோக்கி படையெடுத்த 21 லட்சம் சுற்றுலா பயணிகள் !!
கடந்த 2023-24ம் ஆண்டில் 21 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளின் முதல் தேர்வாக, குஜராத்தின் பாரம்பரிய சுற்றுலா தலங்கள் இருந்தன என குஜராத் மாநில சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 2023-2024 ஆம் ஆண்டில் குஜராத்தின் வரலாற்று பாரம்பரிய சுற்றுலாத்தலங்களுக்கு 21 லட்சம் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிட்டுள்ளனர்.
யுனெஸ்கோ உலக பாரம்பரிய வாரத்தை ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 முதல் நவம்பர் 25 வரை கொண்டாடுகிறது. இதற்காக, இந்திய தொல்லியல் துறையுடன் இணைந்து நாடு முழுவதும் உள்ள பல்வேறு வரலாற்று பாரம்பரிய தலங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
குஜராத்தில் அமைந்துள்ள வட்நகர், ஒரு வரலாற்று பாரம்பரிய தலம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த இடம் என்பதால், மாநில அரசு அந்த பகுதிக்கு முக்கிய கவனம் செலுத்தி வருகிறது.
கலாசார மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை உணர்ந்து, வாட்நகரில் நவீன சுற்றுலா வசதிகளை மேம்படுத்த மாநில அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் 70 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.
2022-23ல் வட்நகருக்கு வருகை தந்த சுற்றுலாத்துறையினரின் எண்ணிக்கை 2.4 லட்சத்தில் இருந்து 2023-24ல் கிட்டத்தட்ட 7 லட்சமாக குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது.
இதேபோல், சிந்து சமவெளி நாகரிகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக பாரம்பரிய தலமான தோலாவிராவும் குறிப்பிடத்தக்க முதலீடுகளைக் கண்டுள்ளது.
மாநில அரசு தோலாவிராவுக்கு ரூ. 185 கோடி மதிப்பிலான சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
தற்போது முதல் கட்டமாக ரூ.76 கோடி மதிப்பிலான திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த வசதிகள் முடிவடைந்தவுடன், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத் பாரம்பரிய சுற்றுலாவின் இந்த புதிய சகாப்தம், மாநிலத்தை உலகளாவிய பாரம்பரிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.